பொது

ம.இ.கா. உதவியுடன் 225 மலேசியர்கள் வங்காளதேசத்தில் இருந்து நாடு திரும்பினர்

26/03/2020 04:49 PM

சிப்பாங், 26 மார்ச் [பெர்னாமா] -- 225 மலேசியர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.46 மணிக்கு வங்காளதேசத்தில் இருந்து பாதுகாப்புடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும், ம.இ.கா. நிதியுதவியுடன் சிறப்பு மாஸ் விமானத்தில் நாடு திரும்பினர்.

அவர்கள் அனைவரும், 130 மாணவர்கள், 55 மலேசிய மேடான் மருத்துவமனையைச் சேர்ந்த அதிகாரிகள், நாட்டை விட்டு வெளியேறிய 35 பேர்,  டாக்காவில் இருக்கும் 5 மலேசிய தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் இருப்பவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரிடமும், விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன், சுகாதார அமைச்சு நிர்ணயித்திருப்பதுபோல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட விருப்பதாக, வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ கமாருடின் ஜப்பார் ஓர் அறிக்கை வழி தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் முயற்சிக்கு உதவ முன்வந்திருக்கும் ம.இ.கா. தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு,வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதற்கு முன்னர், இந்தியாவின் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் சிக்கிக் கொண்ட ஆயிரத்து 119 மலேசியர்களை ஏர் ஆசியா விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான ஆறு விமானங்களின் செலவை ம.இ.கா. ஏற்றுக் கொண்டது.

-- பெர்னாமா