பொது

இஸ்தானா நெகாரா பணியாளர்களில் எழுவருக்கு, கொவிட்-19 நோய்க் கிருமி!

26/03/2020 03:57 PM

கோலாலம்பூர், 26 மார்ச் [பெர்னாமா] -- இஸ்தானா நெகாரா பணியாளர்களில் எழுவருக்கு, கொவிட்-19 நோய்க் கிருமித் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அவர்கள் அனைவரும் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயாதுடின் அல்-முஸ்தப்பா பில்லா ஷாவும் பேரரசியார் துங்கு ஹஜா அசிசா அமினா மைமுன்னா இஸ்கண்டாரியாவும் சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டதாகவும், அவ்விருவருக்கும் அந்நோய்க் கிருமிக் கண்டிருக்கவில்லை என்பதையும் இஸ்தானா நெகாரா மேலாளர் டத்தோ அஹ்மாட் ஃபடில் சம்சுடின் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

மாமன்னர் தம்பதியினர் இருவரும் நேற்று புதன்கிழமைத் தொடங்கி 14 நாட்களுக்குச் சுயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மாட் ஃபடில் தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர், பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் மாமன்னரைச் சந்தித்து நாட்டின் அண்மைய நிலவரங்கள் குறித்து விவாதிப்பதும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கமான ஒன்றாகும்.

ஆனால், மாமன்னர் சுய தனிமைப்படுத்துதலில் இருப்பதால், நேற்று நடைபெற விருந்த அவர்களின் அச்சந்திப்பு இடம்பெறவில்லை.

அதோடு, கொவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கம் முடிவடையும் வரைவில் வாராந்திர முறையில் நடைபெறும் அச்சந்திப்பை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா