சிறப்புச் செய்தி

ஒப்பந்தம் அடிப்படையிலான 2,000 புதிய மருத்துவ ஊழியர்களை நிரந்தரமாக பணிக்கு அமர்த்துங்கள் - மலேசிய மருத்துவ சங்கம்

25/03/2020 08:32 PM

கோலாலம்பூர், 24 மார்ச் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயை எதிர்கொள்ள, ஒப்பந்தம் அடிப்படையிலான 2,000 புதிய ஊழியர்கள் குறிப்பாக தாதியர்களை பணியில் அமர்த்த, அரசாங்கம் 10 கோடி ரிங்கிட்டை ஒதுக்கி இருப்பதாக அண்மையில் பிரதமர் அறிவித்திருந்தார். 

தற்போதைய நிலைமையில், அந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், ஒப்பந்தம் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுபவர்கள், விரைவில் நிரந்தர ஊழியர்களாக பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று, மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

நாட்டில் தற்போது கொவிட் -19 நோய் வேகமாக பரவி வரும் வேளையில், பெரும்பாலான மருத்துவமனைகளில் தாதியர்களின் சேவை அதிகமாக தேவைப்படுவதாகவும், அதை பூர்த்திச் செய்ய, புதிதாக பணியில் அமர்த்தப்படும் தாதியர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்வார்கள் என்றும் டாக்டர் ஞானபாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார். இந்த கொவிட் -19 நோயின் காரணமாக பல மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்கள் உட்பட தாதியர்கள் அனைவரும் கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுவதால், அவர்களின் சேவையை நாம் பாராட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மக்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த உதவித் திட்டங்களை நல்ல வழிகளில் பயன்படுத்திக் கொள்ள பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஞானபாஸ்கரன் அறிவுறுத்தினார். 

-- பெர்னாமா