Tuesday, 07 Apr 2020
சிறப்புச் செய்தி
24/03/2020 08:36 PM

சென்னை, 24 மார்ச் (பெர்னாமா) --  தமிழ்நாட்டின் சென்னையில் சிக்கி தவிக்கும் மலேசியர்கள் இன்றோ, நாளையோ தாய்நாட்டிற்கு திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு முறையும் மலேசியாவில் இருந்து சிறப்பு விமானங்கள் அனுப்பப்படும்போது நமது பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்று விடுதா என்று ஏங்கி தவிக்கின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் அவர்களுக்கு உதவ வேண்டிய, சென்னையில் உள்ள மலேசிய பேராளரகம் அவர்களைத் தொடர்ந்து அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. 

சனிக்கிழமை சென்னைக்கு பயணமான முதல் விமானத்தில் 180-க்கும் அதிகமானோர் மலேசியாவுக்கு பயணமாகிய வேளையில், நேற்று திங்கட்கிழமை மேலும் ஒரு விமானம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னைக்கு விமானம் அனுப்பப்படுகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் பலர் தங்கியிருந்த தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறி விமான நிலையத்துக்கு விரைந்தனர். 

ஆனால், அங்கு வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் சென்னையில் சிக்கிக் கொண்டுள்ள பயணிகளைக் காட்டிலும், மார்ச் 25ஆம் தேதி புறப்படவிருந்த சில பயணிகள் முன்கூட்டியே சென்றிருப்பது அங்குள்ளவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. 

இதில் மலேசிய பயணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய சென்னையில் உள்ள பேராளரகம் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பயணிகள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாள்தோறும் அங்கே கூடும் மலேசியர்களுக்கு முறையான பதில் வழங்கப்படாமல் அலைகழிக்கப் படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

பயணம் செய்யவிருப்போரின் பட்டியல் முன் கூட்டியே வெளியிடப்பட்டால், அதனைப் புரிந்துக் கொண்டு மற்றவர்கள் தங்களின் பயணத்தை திட்டமிட முடியும் என அவர்கள் தெரிவித்தனர். எனினும் கால தாமதாக பட்டியல் வெளியிடப்படுவதுடன் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறிய மலேசியர்களுக்கு முறையான பதில் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே இன்று மேலும் இரண்டு விமானங்கள் சென்னைக்கும், திருச்சிக்கும் பயணமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்திலாவது தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திடுமா என்று அங்குள்ள பல மலேசியர்கள் ஏங்கி தவிக்கின்றனர். 

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க