சிறப்புச் செய்தி

கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்காக தொழில்திறன் பயிற்சிகள்

13/03/2020 08:04 PM

கோலாலம்பூர்,  12 மார்ச் [பெர்னாமா] -- கல்வியில், சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பெருமைப்படுத்தும் அதே வேளையில் பின்தங்கிய மாணவர்களையும் குறைத்து மதிப்பிடாமல் ஊக்கமளித்து அரவணைக்க வேண்டும்.

கல்வியில் பின் தங்கிய மாணவர்களின் தனித்திறமையை அறிந்து அவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருவதாக மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் தோற்றுநர் பசுபதி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஏட்டுக்கல்வியில் பின்தங்கி இருந்தாலும்  தங்களின் தனி திறமைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

இவ்வாறு தனி திறமைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று பசுபதி கூறினார்.

கோலாலம்பூர், சிட்டி செண்டரில் உள்ள ரோயல் சிலாங்கூர் கிளப்பில், எச்.எஸ்.பி.சி. ஒத்துழைப்புடன் நடைபெற்ற மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் பயிற்சி பட்டறையின் ஓராண்டு நிறைவு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், எச்.எஸ்.பி.சி.-யும் மை ஸ்கில்சும் இணைந்து 100 இளைஞர்களுக்கு 12 மாத தொழிற்திறன் பயிற்சியை வழங்கின.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும், மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மூலம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றிருக்கின்றனர்.

இந்த அறவாரியத்தில், மின்சாரம் மற்றும் நீர் குழாய் பொருத்துதல், குளிரூட்டி சரிபார்த்தல், அலுவலக பணியாளர் மற்றும் கேக் உற்பத்தி போன்ற வேலைகளுக்கான  பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதோடு, தற்போதைய சூழலுக்கு ஏற்ற பயிற்சிகளையும் இந்த அறவாரியம் வழங்கி வருவதாக மாணவர்கள் சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

இதனிடையே, இம்மாதிரியான தொழிற்திறன் பயிற்சிகள், தங்களைப் போட்டியாற்றல்மிக்கவர்களாக வளர்த்துக் கொள்ளவும் வருங்கால வாய்ப்புகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் பெரிதும் உதவும் என்று அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

-- பெர்னாமா