சிறுமிச் சித்ரவதை: குற்றச்சாட்டை மறுத்து இருவர் விசாரணைக் கோரினர்

 
 
 

பட்டர்வெர்த், 14 பிப்ரவரி [பெர்னாமா] -- 11 வயதுடைய மகளைச் சித்ரவதைச் செய்ததுடன் அவரைப் புறக்கணித்ததாகத் தங்கள் மீது, பினாங்கு, பட்டர்வெர்த் செஸ்ஷன் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமைச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, கணவன் மனைவி இருவரும் மறுத்திருக்கின்றனர்.

நீதிபதி நோர்ஹயாத்தி முஹமட் யுனுஸ் முன்னிலையில் தனித் தனியாக வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை மறுத்து அவர்கள் இருவரும் விசாரணைக் கோரியிருக்கின்றனர்.

அச்சிறுமியைக் கவனிக்கத் தவறியதுடன், உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கும் வகையில் சித்ரவதைச் செய்ததாக, அச்சிறுமியின் பாதுகாப்பு உரிமையைக் கொண்டிருந்த மாற்றான் தாயான 38 வயதுடைய தி. லோகநாயகி மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளையில், அச்சிறுமையைக் கவனிக் கதவறியது, அம்பலப்படுத்தியது மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்படும் வரையில் கைவிட்டதாக, அச்சிறுமியின் தந்தையான 36 வயதுடைய பி. சந்திரசேகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

2019-ஆம் ஆண்டு மத்தியில் இருந்து இவ்வாண்டுப் பிப்ரவரி 9-ஆம் தேதி, மதியம் 12.15 வரையில், பட்டர்வெர்த், அம்பாங் ஜாஜார் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் வீடொன்றில்,  அவர்கள் இருவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றப் பதிவு வாசிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகைச் செய்யும் 2001-ஆம் ஆண்டுச் சிறார்ச் சட்டம், பிரிவு 31 (1) (எ)-வின் கீழ் அவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

சம்பந்தபட்ட சிறுமியை நேரடியாக அணுகக் கூடும் என்பதால், அவ்விருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் பரிந்துரைத்திருந்தார்.

எனினும், தமக்கு ஏழு பிள்ளைகள் இருப்பதாகவும், அதில் ஒருவருக்கு இருதயம் பலவீனமாக இருப்பதாகவும் கூறி தமக்கு ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்று லோகநாயகி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தனிநபர் உத்ரவாதத்தின் பேரில் 15 ஆயிரம் ரிங்கிட்  தொகையுடன் அவ்விருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மார்ச் 17-ஆம் தேதி நடைபெறும்.

கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்த அச்சிறுமையை அரசாங்கச் சார்பற்ற இயக்கம் ஒன்று காப்பற்றியது.

தற்போது அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

-- பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்