குண்டாசாங் , 23 மே (பெர்னாமா) -- நாடு முழுவதும் தரைவழி சரக்குப் போக்குவரத்துத் துறையில் இயங்கும் ஜீப் மற்றும் pick-up ரக வாகனங்கள், ஜூன் முதலாம் தேதி தொடங்கி, உதவித் தொகைப் பெற்ற டீசல் கட்டுப்பாட்டு செயல்முறை, SKDS-இன் கீழ் டீசலுக்கான உதவித் தொகையைப் பெறத் தகுதி பெறுகின்றன.
டீசல் உதவித் தொகையின் விநியோக செயல்முறை மேம்படுத்தப்படும் என்று மே 20-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
''முன்பு இருந்ததை விட, இந்த வகை ஜீப் மற்றும் 'பிக்கப்' வாகனங்களுக்கான தகுதி கேமரன் மலை பகுதிக்கு மட்டுமே இருந்தது. எனவே, அதிகமான நிறுவனங்கள் பயனடைய அனுமதிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இவ்வகை 'பிக்கப்' மற்றும் ஜீப் வாகனங்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் எஸ்.கே.டி.எஸ்-இன் மூலம் பயனடைவதற்கான அனுமதியையும் தகுதியையும் பெறுகின்றன'' என்றார் அவர்.
வாகனப் பதிவை நிறுவனம் ஒன்றுக்கு மாற்றுவதற்கான ஒப்புதலுக்கு உட்பட்டு, முன்னர் தனிநபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜீப் மற்றும் pick-up வாகனங்களுக்கு SKDS மூலம் டீசல் உதவித் தொகையை விரிவுப்படுத்த அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக அர்மிசான் விவரித்தார்.
இன்று, சபா, குண்டாசாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
23 வகையான வாகனங்களை உள்ளடக்கிய, தரைவழி சரக்குப் போக்குவரத்துத் துறைக்கான SKDS-இன் நிலையான ஒதுக்கீட்டு வரம்பைச் சரிசெய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
உதவித் தொகை கசிவு மற்றும் fleet அட்டையின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறை மற்றும் அமலாக்கப் பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என்று அர்மிசான் மேலும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)