அம்பாங் ஜெயா, 23 மே (பெர்னாமா) -- சிறு வணிகர்களுக்கு குறுங்கடன் சேவை குறித்த தகவல்களை வழங்கும் வகையில், அரசாங்க நிதி நிறுவனங்கள் நேரடியாக களத்திற்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள கடன் வசதிகள் அதிகமாக இருந்தாலும், அவற்றை மக்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை என்று Khazanah ஆராய்ச்சி நிறுவனம், KRI வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எனவே நான் பி.எஸ்.எம், தெக்குன், பேங்க் ரக்யாட், அமானா இக்தியார், மாரா, எக்ரோபேங்க் போன்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடினேன். நான் அவர்களிடம், நேரில் செல்லுங்கள் என்று சொன்னேன். நேரில் செல்ல முயற்சிப்போம். மக்களை அலுவலகத்திற்கு வரச் சொல்லாதீர்கள். அவர்களிடம் நேரில் சென்று, அதனால் கிடைக்கும் நன்மைகளை விளக்குங்கள் என்றார் அவர்.
இன்று, அம்பாங் ஜெயாவில் உள்ள தாமான் மெலாவத்தி விவசாய சந்தையில் நடைபெற்ற, விவசாய தொழில்முனைவோருக்கான Agrobank X FAMA சிறப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தாமான் மெலாவத்தி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் உட்பட பல சிறு வணிகர்கள், ஒரு வணிகத்தை தொடங்குவதற்கு சுமார் 10,000 முதல் 20,000 ரிங்கிட் வரையிலான சிறிய கடன் தேவைப்படுவதாக பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)