கோலாலம்பூர், டிசம்பர் 04 (பெர்னாமா) -- சபாவில் கனிம ஆய்வு உரிமத்திற்கான ஒப்புதலைப் பெற உதவுவதற்காகப் பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சூல் இஸ்கண்டார் முஹமட் அகின் 17 கோடியே 68 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட் மூன்று சென் கையூட்டு வழங்கியதாகத் தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் அந்த நான்கு குற்றஞ்சாட்டுகளும் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்ட பின்னர் 37 வயதான ஆல்பர்ட் தெய் அதனை மறுத்து விசாரணை கோரினார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் 24 மற்றும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 29ஆகிய தேதிகளில் ஜாலான் சுல்தான் ஹிஷாமுதினில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் கார் நிறுத்தும் இடம் மற்றும் கோலாலம்பூர் ஜாலான் மேடாங் செராயில் உள்ள ஒரு வளாகத்தில் டத்தோ ஶ்ரீ ஷம்சூல் இஸ்கண்டாருக்கு ஒரு லட்சம் மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தைக் கையூட்டாகக் கொடுத்ததாக அவர் மீது முதல் இரண்டு குற்றஞ்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
அதே நோக்கத்திற்காக 14,580 ரிங்கிட் 03 சென் மற்றும் 22 ஆயிரத்து 249 ரிங்கிட் மதிப்புள்ள தளவாட மற்றும் மின்சாரப் பொருள்களைக் கையூட்டாகக் கொடுத்ததாக அவர் மீது அடுத்த இரண்டு குற்றஞ்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் குற்றத்திற்கு உட்பட்ட கையூட்டு தொகையின் மதிப்பை விட ஐந்து மடங்கிற்குக் குறையாத அபராதம் அல்லது கையூட்டு தொகை மதிப்பிடத்தக்கதாக இருந்தால் பத்தாயிரம் அல்லது அதற்கும் அதிகமான அபராதம் விதிக்க வகைச் செய்யும் 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம், சட்டம் 694, செக்ஷன் 17(b)இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
70,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் அனைத்து குற்றஞ்சாட்டுகளுக்கும் இரு மலேசியரின் உத்ரவாதத்தின் பேரில் ஆல்பர்ட் தெயை விடுவிப்பதோடு வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு ஜனவரி 8ஆம் தேதிக்கு நீதிபதி சுசானா ஒத்திவைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)