பொது

காவடிகளை ஆங்காங்கே விட்டுச் செல்வது முறையற்ற செயல் - சமய அமைப்புகள்

02/02/2023 08:34 PM

கோலாலம்பூர், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூசத்தின் போது நேர்த்திக் கடனுக்காக எடுக்கும் காவடிகளை மலை இறங்கியதும், ஆங்காங்கே விட்டுச் செல்வது முறையற்ற செயல் என்று சமய அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

சமயத்தை இழிவுபடுத்தும் இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் அந்தக் காவடிகளை வைத்துச் செல்வது நல்லது என்று அவர்களில் சிலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.

''விரதம் இருந்து காவடிகளை பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். அதற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அதனை கண்ட இடங்களை வைக்காமல் மீண்டும் எடுத்து செல்வதே சிறப்பு. அதனை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்,'' என்றார் மலேசிய இந்து சங்கத் தலைவர் கணேசன் தங்கவேலு 

'' நிறைய பக்தர்கள் பால்குடம் ஏந்தி செல்கின்றனர். சிறிய காவடிகளை ஏந்திச் செல்கின்றனர். அந்தக் காவடிகளை வைத்துவிட்டு வருவதற்கு குறிப்பிட்ட இடம் உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு வருவதுதான் சிறப்பு,'' என்றார் 'தர்மவேல்' திட்ட ஒருங்கிணைப்பாளர் குணராஜ் ஜோர்ஜ்.

இதனிடையே, கடந்த காலங்களைப் போன்று இவ்வாண்டும் காவடிகளை வைத்துச் செல்வதற்கு தாராளமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தொண்டூழியர்களும் பணியில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களின் துணையையும் பக்தர்கள் நாடலாம் என்று பத்துமலை ஆலய நிர்வாகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)