உலகம்

உத்தரகாண்டில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில் மக்கள்

02/02/2023 05:59 PM

உத்தரகாண்ட், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தியா, உத்தரகாண்டில் உள்ள மரோடா கிராமத்தில் பல தலைமுறைகளாக தாங்கள் வசித்து வந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில் நூற்றுக் கணக்கான மக்கள் இருக்கின்றனர்.

அப்பகுதியில் இந்திய அரசாங்கம் புதிய ரயில் தண்டாவளத்தைக் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, 45 குடும்பங்கள் வசித்து வந்த அக்கிராமத்தில் கடந்த 18 மாதங்களாக வசிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், அந்த ஹிமாலயா பகுதியில் மிகப்பெரிய அளவிலான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவிருப்பதோடு, நீர்மின் நிலையங்கள், ரயில் தண்டவாளம், நெடுஞ்சாலைகளைக் கட்டவிருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சில திட்டங்கள், ஒரு காலத்தில் பனிப்பாறைகளால் மூடப்பட்ட நிலையற்ற மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு சரிசமநிலையான சுற்றுச்சூழலை சீர்குலைத்ததோடு, நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் தற்போது குடியிருப்புகள் அழிக்கப்படுவதற்கும் காரணமாகியுள்ளன.

அண்மையில், வடக்கு மரோடாவிற்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜோசிமாத் பகுதியில், கட்டப்பட்ட 850 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் அவற்றில் சில முற்றிலும் இடிந்து விழுந்ததில் 900-க்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது நிலையானதாக இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)