பொது

மக்களவையில் சபா, சரவாக் மூன்றில் ஒரு தொகுதியாக இருப்பது இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது

02/02/2023 04:33 PM

கோலாலம்பூர், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- எம்ஏ63 எனப்படும் 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்ப மக்களவையில் சபா மற்றும் சரவாக் மூன்றில் ஒரு தொகுதியாக இருப்பது, இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தை முடிவு செய்வதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.

ஏனெனில், எம்ஏ63 நிர்வகிப்பு செயற்குழு, எம்ஏ63 தொழில்நுட்ப செயற்குழு, எம்ஏ63 அமலாக்க நடவடிக்கை மன்றம் போன்ற மூன்று முக்கிய செயற்குழுக்கள் உட்பட பல்வேறு நிலைகளை அது கடக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

தமது தலைமையிலான எம்ஏ63 தொழில்நுட்ப செயற்குழு, தலைப்பு வாரியாக எம்ஏ63 விவகாரம் குறித்து விவாதிப்பதோடு, ஆழமான சட்டம் அல்லது தொழில்நுட்ப சிக்கல்களை உள்ளடக்காத பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''புதிய தொழில்நுட்ப அடிப்படையின் கீழ் முடிவு செய்யப்பட்ட பின்னர், அனுமதியைப் பெற நடவடிக்கை மன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அதன் பின்னர், அமைச்சரவைக்கும், அனைத்து சட்டங்களையும் திறுத்துவதற்கு இறுதியாக அமைச்சுக்கும் கொண்டுச் செல்லப்படும். எனவே, இது நீண்ட செயல்முறை. அதனால், அமைச்சரவையின் அனுமதியைப் பெற வேண்டும், மூன்றில் இரண்டை பெறுவதற்கு நாடாளுமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட வேண்டும். அங்கீகரிக்கப்படாவிட்டால் நிறைவேற்றப்படாது,'' என்று அவர் மேலும் கூறினார்.

இன்று புதன்கிழமை கோலாலம்பூர் மலேசிய வானொலி தொலைக்காட்சி ஆர்டிஎம்-இல் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை அளித்தப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபடில்லா அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)