பொது

தைப்பூசத்தின்போது உணவு விரயத்தையும் நுரைப்பம் பயன்பாட்டையும் தவிர்ப்பூர் - பி.ப.ச

31/01/2023 08:34 PM

பினாங்கு, 31 ஜனவரி (பெர்னாமா) -- இன்னும் சில தினங்களில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட விருக்கும் வேளையில், இக்காலகட்டத்தில் உணவு விரையத்தையும், போலிஸ்ட்ரின் எனப்படும் நுரைப்பம் பயன்பாட்டையும் தவிர்க்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தைப்பூசத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானமும், பானங்களும் வழங்குவது வழக்கமாகும். 

எனினும், இக்காலக்கட்டத்தில் அதிகமான தனிநபரும், இயக்கங்களும் அன்னதானம் வழங்க முன்வந்திருப்பது, விரயத்தையும் அதிகரிக்கச் செய்திருப்பதை பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி, ஆய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி, என்.வி. சுப்பராவ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி தினமும் 16,687 டன் உணவு விரயம் செய்யப்படுகிறது.

இது ஒரு கோடியே 20 லட்சம் பேர், 3 வேளை வயிறாற உண்ணும் அளவாகும். 

இப்படி வீசப்படும் உணவுகளில் குறைந்தது 3,000 டன் உணவுகள் உண்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளவை.

விழாக்காலங்களின் போது குறிப்பாக தைப்பூசத்தின் போது இந்த விரய எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதாக சுப்பாராவ் கூறினார். 

''தயவு செய்து நீங்கள் தைப்பூசத் திருவிழாவின்போது அமைக்கப்பட்ட பந்தலில் வழங்கப்படும் உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை மட்டும் எடுத்து சாப்பிட்டு முடித்து விடுங்கள் காரணம் கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக உணவுகள் குப்பைத் தொட்டிகளிலும் சாலைகளிலும் தூக்கி எரியப்பட்டிருப்பதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்,'' என்றார் அவர்.

தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று கூறப்படுவதால், பெரும்பான்மையான அமைப்புகள் அன்னதானம் வழங்கி வருகின்றன. 

அன்னதானம் வழங்கும் இந்தப் பண்பை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாக கூறிய சுப்பாராவ், உணவு விரயமாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

அதேவேளையில், இந்த உணவை வழங்குபவர்களும், நுரைப்பத்தின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

''காரணம் உணவு சூடாக இருக்கும்போது அதை நுரைப்பத்தில் சேர்த்தால், அதிலுள்ள ரசாயணங்கள் உணவோடு கலந்து விடும். மேலும், இந்த நுரைப்பம் மண்ணில் சென்று விட்டால் அது கரைவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும்,'' என்று மேலும் சுப்பாராவ் குறிப்பிட்டார்.

ஆகவே, நுரைப்பம் அல்லது நெகிழியில் உணவை வழங்குவதற்கு பதிலாக தட்டுக்கள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட தட்டுக்களைப் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)