அரசியல்

அம்னோவிலிருந்து நீக்கம்: மேல்முறையீடு செய்யப் போவதில்லை - கைரி திட்டவட்டம்

30/01/2023 02:38 PM

அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை - கைரி திட்டவட்டம்

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- அம்னோவிலிருந்து தாம் நீக்கப்பட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று, அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தீர்க்கமாகக் கூறியுள்ளார்.

கட்சியிலிருந்து தம்மை நீக்க விரும்பியவர்களே உச்சமன்றக் குழுவில் இருப்பதால், மேல்முறையீடு செய்வதில் அர்த்தமேதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

"மேல்முறையீடு செய்வது என்பது, ஒருதலைபட்சமாகவும் விரைவாகவும் கட்சியிலிருந்து என்னை  நீக்கிய அதேகட்சிக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகும் " என்று கைரி குறிப்பிட்டார்.

எனினும், அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, நான் இன்னும் அவரை நண்பராகவே கருதுகிறேன்" என்றும் கைரி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடந்த நாட்டின் 15-வது பொதுத் தேர்தலின்போது, கட்சியின் கட்டொழுங்கை மீறியதற்காக, கைரி கடந்த வெள்ளிக்கிழமை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மாநில முன்னாள் அம்னோ தலைவர் டான் ஶ்ரீ நோ ஒமார் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் உசேனும், இதே கருத்தைத்தான் கொண்டிருக்கின்றனர்.

கட்சியில் உள்ளவர்கள் "எங்களைத் தூக்கி எறிவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததால், மேல்முறையீடு செய்வதில் அர்த்தமேதுமில்லை"  என்றும் அவர்கள் இருவரும் கூறியிருப்பதாக, கைரி தெரிவித்தார்.

வரும் மே மாதத்தில் நடைபெற விருப்பதாகக் கூறப்படும் அம்னோ தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிருக்க வேண்டும் என்ற
தமது நியாயத்தை கைரி மீண்டும் வலியுறுத்தினார்.

"பொதுத் தேர்தலில் சாஹிட் தலைமையில் அம்னோ மிக மோசமான தோல்வியை அடைந்த காரணத்தினால், இரண்டு உயர் பதவிகளுக்கு வெளிப்படையான போட்டி இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன்" என்று கைரி கூறினார்.

இதனிடையே, வேறொரு கட்சியில் சேர்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துக் கேட்டபோது, தமது எதிர்காலம் குறித்துச் சிந்திக்க சிறிது காலத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக கைரி தெரிவித்தார்.

தங்கள் கட்சியில் சேருமாறு பலரிடமிருந்து தாம் அழைப்பைப் பெற்றிருப்பதாகவும் அது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)