பொது

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

28/01/2023 08:27 PM

மெர்சிங், 28 ஜனவரி (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாயிட் ஹமிடி தெரிவித்தார்.

"வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. நான்காவது அலை (வெள்ளம்) ஏற்படாது என்று நான் நம்புகின்றேன். தற்போது நாம் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்," என்றார் அவர்.

சனிக்கிழமை, ஜோகூர் மெர்சிங்கில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பின்னர் அஹ்மாட் அவ்வாறு கூறினார்.

வெள்ள நிலைமை மற்றும் அதன் பாதிப்புகளை ஆய்வு செய்ய தாம் சபாவுக்குச் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாலை 4 மணி நிலவரப்படி, மெர்சிங் மாவட்டத்தில் 6 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வந்தன.

அவற்றில் 796 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)