பொது

மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

28/01/2023 06:20 PM

கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- இன்று காலை நிலவரப்படி, ஜோகூர், சபா, மற்றும் சரவாக் மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13,827 பேர் 73 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூர் மாநிலத்தைப் பொறுத்தவரை, மெர்சிங் பகுதியில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதாவது 1,792 பேர் உள்ளதாக பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு (ஜே.பி.பி.என்) தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து, ஜோகூர் குளுவாங்கில் 780 பேர், கோத்தா திங்கியில் 417 பேர், பத்து பகாட்டில் 209 பேர், செகமாட்டில், 115 பேர் மற்றும் தாங்காக்கில் 15 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜே.பி.பி.என் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அம்மாநிலத்தில், வெள்ளிக்கிழமை இரவு 3,328-ஆக இருந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இன்று பிற்பகலில் 3,480 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் உள்ள 35 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சபாவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

காலை நிலவரப்பட்டி, 10,347 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிதாஸ்சில் உள்ள ஒன்பது மையங்களில் மொத்தம் 2,160 பேரும், பைதானில் உள்ள ஒன்பது மையங்களில் 664 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, தாவாவில் 109 பேர் மற்றும் தெலுபிட்டில் 21 பேரும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இறுதியாக, பகாங் ரொம்பினில், சனிக்கிழமை காலை வரையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாமல், 353-ஆகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)