BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
சிறப்புச் செய்தி

நவபாஷாணம் என்றால் என்ன?

27/01/2023 07:27 PM

கோலாலம்பூர், 27 ஜனவரி (பெர்னாமா) -- பழனி முருகன் கோவில் மூலவர் சிலை, பல விதமான மூலிகைகளைக் கொண்டு போகர் சித்தர் தனது கையால் செய்த சிலையாகும்.

ஆனால், முருகனின் தலையில் இருக்கும் ருத்ராட்ச மாலை, கண், மூக்கு, வாய், கை விரல்கள் என அனைத்தும் உளி கொண்டு செதுக்கியதைப்போல் காட்சி தருவது இச்சிலையின் மற்றொரு தனிச் சிறப்பாகும்.

பழனி மலையில் மூலவராக வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சுவாமியின் சிலை நவபாஷாணத்தால் ஆனது.

இது போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இந்த நவராபாசாண சிலை உருவாக்கப்பட்டது, கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு சிலை இன்று வரை மருத்துவ குணம் மாறாமல் இருப்பது போன்ற பழனி முருகன் சிலை பற்றிய பல விஷயங்கள் அதிசயிக்க வைக்கின்றன.

நவபாஷாணம் என்றால் என்ன?
பாஷாணம் என்றால் விஷத் தன்மை கொண்ட பொருள் என்பது அர்த்தம்.

9 வகையான விஷத்தன்மை கொண்டது பொருட்களைப் பிரதானமாக வைத்துச் செய்யப்பட்டதே நவபாஷாண சிலை.

பாஷாணம் என்பது மொத்தம் 64 வகையானது. இவற்றில் நீலி என்ற பாஷாணம் மற்ற 63 வகையான பாஷாணங்களின் நச்சுத்தன்மையையும் முறித்து விடும் தன்மை கொண்டதாகும்.

நவபாஷாணங்கள்:
1. சாதி லிங்கம்
2. மனோசிலை
3. தாரம்
4. வீரம்
5. கந்தகம்
6. பூரம்
7. வெள்ளை பாஷாணம்
8. கெளரி பாஷாணம்
9. தொட்டி பாஷாணம்

நவபாஷாண சிலை:
பழனி முருகன் சிலை நவபாஷாணம் எனப்படும் இந்த 9 வகையான பொருட்கள் மட்டுமல்ல 4000-துக்கும் அதிகமான மூலிகைகளால் செய்யப்பட்டது.

ஆனால், இவை பொதுவாக நவபாஷாணம் என்றே குறிப்பிடப்படுகிறது.

தெய்வ உத்தரவின் பேரில் போகர் சித்தர் இந்த நவபாஷாண சிலையைச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த சிலையைச் செய்வதற்காகப் போகர் எடுத்துக் கொண்ட கால அளவு 9 ஆண்டுகள். 

இந்த சிலை செய்யப் பயன்படுத்தப்பட்டு 9 வகையான பாஷாண பொருட்களும் 9 வகையான இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் கொண்டதாகும்.

பழனி முருகன் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு ?
பழனி முருகன் சிலையில் சேர்க்கப்பட்டுள்ள 9 பாஷாண பொருட்கள் ஒவ்வொன்றும் நவகிரகங்களுடன் தொடர்புடையது.

ஒவ்வொரு பொருளும் ஒரு நவகிரகத்தின் தன்மையைக் கொண்டதாகும்.

இதனால் பழனி முருகனை வழிபட்டால் நவகிரகங்களையும் வழிபட்ட பலனைப் பெற முடியும்.

நவகிரகங்களின் தோஷங்களும் பழனி முருகனை வழிபட்டால் நீங்கி விடும்.

பழனி தண்டாயுதபாணி சிலைக்கு ஒரு நாளைக்கு 6 முறை அபிஷேகம் நடைபெறும். 

நல்லெண்ணெய், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகிய நான்கு பொருட்கள் மட்டுமே சிலை முழுவதும் படும் வகையில் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும்.

மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர், பால் கொண்டு அபிஷேகம் நடத்தப்படும். ஒரு அபிஷேகம் என்பது 5 முதல் 7 நிமிடங்களில் முடிவடைந்து விடும்.

ஒரு முறை அபிஷேகம், அலங்காரம் முடிந்து விட்டால், மீண்டும் அடுத்த அபிஷேகம் நடைபெறும் வரை மாலை அணிவிப்பது, அர்ச்சனை செய்வது என்பது கிடையாது.

முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்
பழனி முருகன் சிலையின் மார்பில் இரவில் வட்ட வடிவில் சந்தனக் காப்பு இடப்படுகிறது.

அதேபோல் நெற்றில் இரு புருவங்களுக்கும் இடையே சிறிய சந்தனப் பொட்டு வைக்கப்படுகிறது.

பழனி முருகன் சிலை எப்போது உஷ்ணத்துடனேயே காணப்படுவதால் அவ்வாறு சந்தனக் காப்பு இடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

காலையில் நடை திறக்கப்படும்போது, அந்த உஷ்ணத்தால் முருகனின் சிலை முழுவதுமாக வியர்வை துளிர்கள் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.

முருகன் சிலை மீது வியர்த்த நீர், அபிஷேக நீருடன் கலக்கப்பட்டு காலை நேரத்தில் அங்கு இருப்பவர்களுக்குத் தீர்த்த பிரசாதமாக வழங்கப்படுகிறது.

முருகனின் சிலையில் வியர்த்த நீர் கலந்த தீர்த்தம், முருகனின் திருமார்பில் இரவில் சாத்தப்படும் சந்தனம் ஆகியவை அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடிய மருந்தாக அமைக்கிறது.

விஷம் என்று குறிப்பிடப்படும் பொருட்களால் செய்யப்பட்ட சிலை மீது இரவில் வைக்கப்படும் பொருள், காலையில் மருந்தாக மாறுவது இன்றும் பழனியில் நடக்கும் அதிசயமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)