சிறப்புச் செய்தி

நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!

25/01/2023 04:06 PM

திண்டுக்கல், 25 ஜனவரி (பெர்னாமா) -- தூக்கணாங்குருவியைக் கிராமப் புறங்களில் வாழ்பவர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள். 

இது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை. 

தனித் திறனோடு சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று. 

பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் நேர்த்தியானவை. 

இது ஊர்க்குருவி வம்சத்தைச் சேர்ந்த ஒரு பறவை.

அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால், இதன் தலையின் மேல் பகுதி, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். 

வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக் கூடி வாழும். முட்டை இடும் காலங்களில் இது மஞ்சள், கறுப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். 

கூடு கட்டிக் குஞ்சு பொரிக்காதபோது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக் கழிக்கும்.

கோடையில் ஒர் கிணற்றருகில் அல்லது குளக்கரையில் உள்ள ஈச்சமரம், கருவேல மரம், இலந்தை மரம், பனைமரம் மற்றும் மின் கம்பிகளிலும் இவை கூடு கட்டும். 

கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். 

தூக்கணாங்குருவி பொதுவாக 15 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. ஆண் மற்றும் பெண் இரு பாலினமும் கூடு கட்டக்கூடியது. 

வால் பகுதி சிறியதாகவும் மேல் பகுதி தடித்தும் காணப்படும். சராசரியாக 20 கிராம் எடை கொண்டது.

தூக்கணாங்குருவியில் இரு வகை உண்டு. ஒன்று மேல்பகுதி அடர் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். கீழ்ப்பகுதி வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

மற்றொரு வகைக் குருவி பழுப்புடன் கூடிய வெண்மைக் கோடுகளைக் கொண்டிருக்கும். 

இது புல், அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானிய வகைகளையும், வெட்டுக்கிளி, ஈக்கள், வண்டுகள், கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி, சிலந்தி, சிறிய நத்தைகள், தவளைகள் ஆகியவற்றையும் உணவாக உட்கொள்ளும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)