BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
அரசியல்

'தர்மமோ' - 'அன்பளிப்போ' அரசியலில் அது லஞ்சம்தான் - அசாம் பாக்கி

24/01/2023 12:37 PM

கோலாலம்பூர், 24 ஜனவரி (பெர்னாமா) -- சட்டத்தில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில், எந்த ஒரு லஞ்ச விவகாரமாக இருந்தாலும் மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதைக் கண்டிப்பாக விசாரிக்கும்.

இதில், தனிப்பட்ட கருத்துக்கு இடமில்லை என்று, எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படக் கூறியிருக்கின்றார்.

வாக்குகளை வாங்குவதற்காக அவ்வாறு செய்யப்பட்டால் சட்டப்படி அது லஞ்சம்தான் என்றும் அதை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் விவரித்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 10(ஏ) இதைத் தெளிவாக விவரிக்கிறது என்று கூறிய அசாம் பாக்கி, அத்தகைய செயல் குறித்து யாரும் தங்களின் எத்தகைய தனிப்பட்ட கருத்துகளையோ விளங்களையோ தெரிவிக்கலாம்  என்று குறிப்பிட்டுள்ளார்.

"அது 'தர்மமோ' அல்லது 'அன்பளிப்போ" வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதைச் சட்டம் ஒரு லஞ்சமாகவே கருதுகிறது. வாக்காளர்கள் அதைக் கேட்டார்களா இல்லையா என்பது முக்கியமல்ல" என்று அவர் தீர்க்கமாகக் கூறினார்.

பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங்கின் அறிக்கையைத் தொடர்ந்து,
கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடந்து முடிந்த நாட்டின் 15-வது பொதுத் தேர்தலின்போது கிழக்குக் கரை மாநிலத்தில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி திரெங்கானு அம்னோ அண்மையில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியில் வாக்காளர்களுக்குச் சிலர் பணம் வழங்கிய சம்பவம் வெறும் பொதுத் தொண்டுதான் என்றும் ஹடி அவாங் கூறியிருந்தார்.

வேட்பாளர்களும் அவர்களின் ஏஜெண்டுகளும்தான் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தடுக்கப்படுகிறது என்று தேர்தல் சட்டங்கள் கூறுவதாகவும் ஹடி அவாங் கூறியிருந்தார்.

அவரின் அத்தகைய கருத்துக்கள் பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு இலக்காகின.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)