அரசியல்

ஆறு சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தேமுவுடன் பிஎச் இன்னும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை

24/01/2023 11:36 AM

புக்கிட் மெர்தாஜாம், 24 ஜனவரி (பெர்னாமா) -- ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இரண்டு கூட்டணிகளும் போட்டியிடும் தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய முன்னணியுடன் நம்பிக்கைக் கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுக்களைத் தொடங்கவில்லை.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் மாநில தேசிய முன்னணி தலைவர்களுடன் விவாதிக்கவும் பேச்சுக்கள் நடத்தவும் மாநில நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்குத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்று, அதன் தலைவருமான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆறு மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு சட்டமன்றத் தேர்தல்களில் திகுதிப் பங்கீடு குறித்து நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணியும் கலந்து பேசியிருக்கின்றனவா என்று கேட்டபோது அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, அன்வார், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள செரோக் தோக் குன்னில் திங்கட்கிழமை இரவில் நடைபெற்ற 'பிரதமருடனான மக்கள் விருந்து' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பில் அவ்விரு கூட்டணிகளும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுக்களை நடத்தி இருப்பதாக, கெஅடிலான் துணைத் தலைவர் ரஃபிசி ராம்லி சனிக்கிழமை கூறியிருந்தார்.

இதனிடையே, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநில சட்டமன்றங்களைக் கலைப்பதற்கான தேதியை பாஸ் கட்சியே முடிவு செய்யும் என்று அக்கட்சி கூறியிருப்பதால், அதன் விவகாரத்தில் தாம் தலையிட விரும்பவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

அது, பாஸ் கட்சியின் தனி உரிமை என்றும் அது தேர்தல் ஆணையத்துடன் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறிய அன்வார், தனியாகத் தேர்தல் நடத்தப்பட்டால், செலவுதான் அதிகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)