அரசியல்

சபா மாநிலம் இப்போது சரியான பாதையில் செல்கிறது -ஹாஜிஜி

23/01/2023 08:08 PM

சண்டாக்கான், 23 ஜனவரி (பெர்னாமா)  மாநிலத்தை மேம்படுத்துவதற்காகச் சபா மஜு ஜெயா வளர்ச்சித் திட்டத்தை வெற்றியடையச் செய்ய மாநில அரசு தன்னால் இயன்றதைச் செய்ததன் மூலம் சபா இப்போது சரியான பாதையில் செல்கிறது.

மாநில அரசும் சபா மக்களும் தொடர்ந்து ஒன்றிணைந்து மாநிலத்தின் வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார்கள் என்று, சபா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நோர் நம்புகிறார்.

"நமது மாநிலத்தை நாம் சிறப்பாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதன் மூலம், சபாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் மலேசியாவின் இரண்டாவது ஏழை மாநிலமாக இருக்க முடியாது. இன்னும் சில ஆண்டுகளில் சபா மாநிலத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக உயர்த்துவோம் என்று உறுதியளிக்கிறேன்" என்று ஹாஜிஜி தெரிவித்தார்.

சபா, சண்டாக்கானில் இன்று நடந்த சீனப் புத்தாண்டு பொது உபசரில் கலந்து கொண்டபோது ஹாஜிஜி அவ்வாறு தெரிவித்தார்.

சபா மக்களும் அரசாங்கமும் வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், 660 கோடி ரிங்கிட்டை வசூலிக்க முடியும் என்பதுடன் கடந்த ஆண்டு பதிவான 334 கோடி ரிங்கிட் மதிப்புள்ள முதலீட்டைவிடக் கூடுதலாக வரும் ஆண்டில் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாண்டு சீனப் புத்தாண்டைக் கொண்டாட்டம் குறித்து கருத்துரைத்த அவர், சீனர்களின் ராசியில் இடம்பெற்றிருக்கும் முயல், அமைதி, செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது என்பதுடன் சவால்மிக்க இரண்டு ஆண்டுக்கால கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து விடுபடும்போது இந்த முயல் ஆண்டு பிறந்திருக்கிறது என்று ஹாஜிஜி தெரிவித்தார்.

மேலும், இந்த முயல் ஆண்டு மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வார்கள் என்பதுடன் பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க முடியும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சபா மாநிலத்தை மேம்படுத்துவதிலும் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வதிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் சீன சமூகத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, ஹாஜிஜி தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் சபாவில் அரசியல் நிலைத்தன்மை மேம்பாடு அடைந்து வருவதாக, இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபா ஜசெக தலைவர் டத்தோ பிரேங்கி பூன் மிங் ஃபங் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)