பொது

நஜிப்பின் சீராய்வு விண்ணப்பத்தை செவிமடுக்கத் தொடங்கியது கூட்டரசு நீதிமன்றம்

19/01/2023 05:37 PM

புத்ராஜெயா, 19 ஜனவரி (பெர்னாமா) -- எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிலைநிறுத்தி விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, சீராய்வு செய்யக்கோரி டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் செய்திருந்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் இன்று செவிமடுக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான, கூட்டரசு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி தமக்கு எதிராக விதித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு நஜிப் விண்ணப்பித்திருந்தார்.

கூட்டரசு பிரதேச நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ வெர்னோன் ஓங் லாம் கியாட், டத்தோ ரொட்சாரியா புஜாங், டத்தோ நோர்டின் ஹசான் ஆகியோர் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவிற்கு சபா மற்றும் சரவாக்கிற்கான தலைமை நீதிபதி டத்தோ அப்துல் ரஹ்மான் செப்லி தலைமையேற்றார்.

சம்பந்தப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய நீதிமன்ற நடைமுறைகள் வழி நஜிப் செய்யும் இறுதி முயற்சி இதுவாகும்.

அதோடு, எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷனல் வழக்கில் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைக்காக அரச மன்னிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான மனுவையும்,பெக்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நஜிப் இன்று தாக்கல் செய்தார்.

ஷாஃபியி & கோ வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம், தன்னிச்சையான தடுத்து வைப்பு குறித்து ஐநா அமைப்பின் மனித உரிமை மன்ற பணிக்குழுவிடம், கடந்த ஜனவரி 5ஆம் தேதி நஜிப், அந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)