GE15 NEWS  
பொது

வெள்ளம்: மின்சார பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பீர்

24/12/2022 04:30 PM

கோல திரெங்கானு, 24 டிசம்பர் (பெர்னாமா) --  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் மின்சார பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றனர்.

இது மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க உதவும் என்று மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் திரெங்கானு மாநில இயக்குநர் முஹ்மட் ஹில்மான் அப்துல் ரஷ்ஹிட் தெரிவித்தார்.

வெள்ள நீரில் மூழ்கிய மின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவற்றை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட நேரமாக நீரில் மூழ்கிய மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீச்சம்பவம் ஏற்படலாம் என்று கூறிய முஹ்மட் ஹில்மான், மின்சாரத் தாக்கத்தினால் மரணம் ஏற்படும் சாத்தியத்தையும் மறுக்கவில்லை.

திரெங்கானுவில் டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தினால், அங்கு 15 தீச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, மின்சார கோளாரினால் இரு வீடுகளில் தீப்பற்றிக் கொண்டதையும் ஹில்மான் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னரே தங்களின் வீடுகளுக்குத் திரும்புமாறு அவர் மக்களை வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை, கம்போங் தஞ்சோங் செத்தியூவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியப் பின்னர் ஹில்மான் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)