பொது

பகாங் மற்றும் ஜோகூரில் தொடர் கனமழை பெய்யும்

14/12/2022 08:07 PM

கோலாலம்பூர், 14 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று நள்ளிரவு 12 மணி வரை, பகாங் மற்றும் ஜோகூரில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில், ரொம்பின் மற்றும் பெக்கான், ஜோகூரில் மெர்சிங் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆறு மணி நேரத்தில் 60 மில்லிமீட்டருக்கும் மேல் தொடர்ந்து கனமழை பெய்யும் அறிகுறிகள் தென்படுவதாக ​மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

கூடுதலாக, பகாங்கில், குவந்தான் மற்றும் பெரா, ஜோகூரில் செகாமாட், குலுவாங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்யும் என்றும் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

அதைத் தவிர்த்து, டிசம்பர் 17 தொடங்கி 20ஆம் தேதி வரை, கிளந்தான், தெரெங்கானு, பகாங்கில் ஜெராந்துட், மாரான், ரொம்பின், ஜோகூரில் குலுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)