அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து கேலி செய்வதை முகிடின் நிறுத்திக் கொள்ள வேண்டும் -அஹ்மாட் சாயிட்

04/12/2022 06:08 PM

கோலாலம்பூர், 04 டிசம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் ஒற்றுமை அரசாங்கத்தை கேலி செய்து விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதற்கு மாறாக, எவ்வாறு ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது என்பது குறித்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசினும் பெரிக்காத்தானின் உறுப்புக் கட்சிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.   

நாட்டின் பத்தாவது பிரதமரின் நியமனம் உட்பட ஒற்றுமை அரசாங்கத்தின் உருவாக்கம், மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரி'அயாத்துடின் அல்-முஸ்தப்பா பில்லா ஷாவினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அதை எதிர்க்கட்சியினர் மதிக்க வேண்டும் என்று, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

அனைத்து நியமனங்களையும் சர்ச்சைக்குள்ளாக்க முயன்று வரும் முகிடின் மற்றும் அவரின் கூட்டணியின் செயல், மலாய் ஆட்சியாளர்களை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது என்று, துணைப் பிரதமருமான அஹ்மாட் சாஹிட் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.   

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 40 உட்பிரிவு 2 உட்பிரிவு (a) மற்றும் சட்டப் பிரிவு 43 உட்பிரிவு 2 உட்பிரிவு (a) ஆகியவற்றின் கீழ், ஒருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு இருப்பதை அஹ்மாட் சாஹிட் சுட்டிக் காட்டினார்.   

நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கும் அன்வாரை விமர்சித்த முகிடினின் செயலை சாஹிட் வன்மையாகக் கண்டித்தார். 

மலேசியாவின் நிதி மற்றும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு உயர்த் திறன் கொண்டவராக அறியப்படும் அன்வார், தற்போது நாட்டிற்கு தேவை என்பதை முகிடின் உணரவில்லை என்றும் அஹ்மாட் சாஹிட் சாடினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)