அரசியல்

செனட்டர்களாக நால்வர் நியமனம்

03/12/2022 07:00 PM

கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) -- 28 பேர் அடங்கிய அமைச்சரவையைச் சேர்ந்த நால்வர் மேலவை உறுப்பினர்களாக இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காலை 8.30 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில், மேலவைத் தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் ரயிஸ் யாத்திம் முன்னிலையில் அவர்களுக்குப் பதவிப் பிரமாண உறுதிமொழி சடங்கு நடைபெற்றது.

நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைச் செயலாளரும், உள்துறை அமைச்சருமாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், முன்னாள் நிதியமைச்சரும் நடப்பு அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சருமான தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ், தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் வெளியுறவு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டத்தோ ஶ்ரீ சம்ரி அப்துல் காடீர், ஷரீஇ தலைமை நீதிபதியும், மத விவகாரங்களுக்கான அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள டத்தோ டாக்டர் முகமட் நைம் மொக்தார் ஆகிய நால்வரே இன்று செனட்டர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இவற்றுள் சைஃபுடின் நசுதியோன், சம்ரி, முகமட் நைம் மொக்தார் ஆகிய மூவர் புதிய மேலவை உறுப்பினர்களாக மாட்சிமை தங்கிய மாமன்னரால் நியமிக்கப்பட்டுள்ள வேளையில், தெங்கு சஃப்ரூல் மீண்டும் நியமனம் பெற்றுள்ளார்.

இதனிடையே, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் செக்‌ஷன் 43 உட்பிரிவு 2 உட்பிரிவு
பி-யின் கீழ் ஒருவர் அமைச்சராகப் பதவியேற்க வேண்டுமெனில், அவர் மக்களவை உறுப்பினராகவோ அல்லது மேலவை உறுப்பினராகவோ இருக்க வேண்டும் என இப்பதவி ஏற்புச் சடங்கில் உரையாற்றிய டான் ஶ்ரீ டாக்டர் ரயிஸ் யாத்திம் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)