பொது

சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம்; இந்தியர்களுக்கான உதவித் தொகை 13 லட்சம் அதிகரிப்பு

28/11/2022 08:20 PM

ஷா ஆலாம், 28 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் இந்தியர்கள் அதிகளவில் வாழும் மாநிலங்களில் முதன்மையாக விளங்கும் சிலாங்கூரின் அடுத்தாண்டுகான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான மானியம் கடந்த ஆண்டைக் காட்டிலும் கணிசமாக  உயர்வு கண்டுள்ளது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் அம்மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அண்மையில் வாசிக்கப்பட்ட 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த எண்ணிக்கை 33 லட்சம் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் வீரமான் தெரிவித்தார்.

கடந்த காலங்களைப் போலவே அடுத்த ஆண்டும் மாணவர்களின் பள்ளிப் பேருந்து கட்டணம், உயர்க்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு உதவிநிதி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வளர்ச்சி நிதி ஆகியவை தங்கு தடையின்றி வழங்கப்படும்.

அதேவேளையில், கூடுதலாக ஒதுக்கப்பட்ட இந்நிதியின் மூலமாக மாநிலத்திலுள்ள இந்தியர்களின் தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படுவதோடு அடுத்த ஆண்டு மத்திக்குள் பல புதிய திட்டங்களும்   அமல்படுத்துவதற்கு தாம் உத்தேசித்துள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கணபதி ராவ் கூறினார். 

''இம்முறை வழங்கப்பட்டுள்ள நிதியின் மூலமாக இன்னும் கூடுதலான அதிலும் குறிப்பாக வசதி குறைந்த இந்திய மாணவர்களின் கல்வித் தேவைகாக இந்நிதி பயன்படுத்தப்படும். அதேவேளையில் உதவி பெறும் உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களும் இதன்மூலமாக அதிகரிக்கப்பெறும். இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்டறியப்பட்டு அதற்கு உரிய தீர்வு காணப்படும்,'' என்று கணபதி ராவ் குறிப்பிட்டார்.

அதைத் தவிர்த்து, சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60 லட்சம் ரிங்கிட், இம்முறை 80 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

''சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இஸ்லாம் அல்லாத ஆலயங்களுக்கு அதன் தேவைக்கேற்ப இந்நிதி பிரித்துக் கொடுக்கப்படும். அதேவேளையில் தங்களின் பராமரிப்பில் இருக்கும் ஆலயத்தை முறையாகப் பதிவு செய்யாமல் இருக்கும் தரப்பினரும் விரைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கி வரும் இவ்வாறான மானியங்களை,  கையாடல் செய்யாமல்,முறையாக நிர்வகித்தால் மேலும் பல உதவிகளை மாநில அரசிடம் இருந்து பெற முடியும் என்று கணபதி ராவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்திய சமுதாயத்தின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, அதிக மானியங்களை ஒதுக்கியதில் இதர மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூர் முன்னிலை வகிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)