பொது

முட்டை விலை அதிகரிப்பு; பொது மக்கள் ஃபொம்காவிடம் புகார்

28/11/2022 07:40 PM

கோலாலம்பூர், 28 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்றதைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் மற்றும் கோழி முட்டைகள் தட்டுப்பாடின்றி அனைத்து இடங்களிலும் தாராளமாக கிடைப்பதாக சில தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கருத்துரைத்து வருகின்றனர்.

ஆனால், இன்னமும் சில இடங்களில் முட்டை மட்டுமின்றி கோழிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, முந்தைய நிலையைக் காட்டிலும் விலையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தமக்கு புகார் அளித்திருப்பதை மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனமான ஃபொம்காவின் தலைமை செயல்முறை அதிகாரி முனைவர் சரவணன் தம்பிராஜா சுட்டிக் காட்டினார்.

சில மாதங்களுக்கு முன்னதாக, அதாவது ஆகஸ்ட் மாத இறுதியில் நாடு தழுவிய அளவில் கோழிக்கும் கோழி முட்டைக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் அரசாங்கம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி இருந்தது.

அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த மாதத்தில் கோழி மற்றும் முட்டை விநியோகிப்பு சீராக இருந்து வந்தது.

தற்போது நாட்டின் சில பிரதான பகுதிகளில் மீண்டும் கோழி மற்றும் முட்டை கிடைப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும், சில இடங்களில் முட்டை வாங்கும் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களில் சிலர் தமது தரப்பிடம் புகார் கூறியுள்ளதாக முனைவர் சரவணன் தம்பிராஜா கூறினார்.

''இவ்விவகாரம் தொடர்பில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதோடு தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு அபராதமோ அல்லது சட்ட தண்டனையோ விதிக்க வேண்டும். இல்லையெனில் இது மீண்டும் ஒரு தொடர்கதையாக விஸ்வரூபம் எடுக்கும்,'' என்று அவர் குறிப்பிட்டார். 

அதேவேளையில், பயனீட்டாளர்களான மக்களும் பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் அல்லது வியாபாரிகள் மீதான அதிருப்தி போன்றவற்றை தகுந்த தரப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

''குறிப்பாக வியாபாரிகள் செய்யும் தவறுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதற்கு பதிலாக அமைச்சிடமோ அல்லது தமது தரப்பிடமோ புகார் கூறினால் விரைந்து அதற்கு தீர்வு காணப்படும்,'' என்றார் அவர்.

இதனிடையே, அடிப்படை உணவுப் பொருட்களைப் பதுக்கி பின்னர் விலையேற்றி விற்பது, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை வியாபாரிகளும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் சரவணன் நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)