பொது

புரூணை சுல்தான் செலுத்திய காரில் அன்வார்

28/11/2022 04:10 PM

சுபாங், 28 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியாவிற்கு இன்று சிறப்பு வருகைப் புரிந்திருக்கும் புரூணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்க்கியா தாமே செலுத்திய காரில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவிற்கு சென்றிருக்கிறார்.

அந்த காரில், அவர்கள் இருவருடன் புரூணை சுல்தானின் புதல்வர் பெங்கிரான் மூடா அப்துல் மட்டீன் போல்க்கியாவும் உடன் பயணித்தார்.

காலை 11.45 மணியளவில் தமது பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் சுல்தான் ஹசானாலின் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த டத்தோ ஶ்ரீ அன்வார் ஊடகவியலாளர்களைக் கண்டு கையசைத்தார்.

சிலாங்கூர், சுபாங்கில் உள்ள அரச மலேசிய ஆகாயப் படை (தியூ.டிஎம்) தளத்தில் இருந்து புரூணை தூதரகம் ஏற்பாடு செய்திருந்த பிஎம்டபிள்யூ ரகக் காரில் அவ்விரு தலைவர்களும் பாதுகாப்பு படையினருடன் புத்ராஜெயாவிற்கு பயணம் செய்தனர்.

முன்னதாக, தியூடிஎம் தளத்தில் பாதுகாப்பாக வந்தடைந்த சுல்தான் ஹசானால் மற்றும் அவரின் பேராளர்கள் குழுவினரை காலை 11.40 மணிக்கு அன்வாரும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ முஹமட் சுக்கி அலியும் வரவேற்றனர்.

மேஜர் முஹமட் ஃபௌட்சி சே ஹஷிம் தலைமையிலான அரச மலேசிய தரைப் படை, சுல்தான் ஹசானாலுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

நவம்பர் 24-ஆம் தேதி, நாட்டின் 10-வது பிரதமராக பதவியேற்றிருக்கும் அன்வாரை சந்திப்பதற்காக சுல்தான் ஹசானால் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.

பொதுவான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையிலான உறவு ஆகிய அம்சங்களினால் மலேசியாவிற்கும் புரூணைக்கும் நீண்ட கால சிறப்பு நல்லுறவு இருப்பதை விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]