பொது

வருமான வரி விகிதம் 2% குறைக்கப்படும்

07/10/2022 08:29 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- நடுத்தர வர்க்கத்தினரை அரசாங்கம் ஒருபோதும் மறந்ததில்லை.

மாறாக M40 பிரிவினர் பயனடையும் வகையில் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

தனிநபர் வரி செலுத்தும் 10 லட்சம் பேருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, 50,000 ரிங்கிட்டிலிருந்து ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான வரிக்கு உட்பட்ட வருமான வரி விகிதம் இரண்டு விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அதோடு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 4 லட்சம் ரிங்கிட் வரையிலான வரிக்கு உட்பட்ட வருமான வரம்பு 4 லட்சம் ரிங்கிட்டில் இருந்து 6 லட்சம் ரிங்கிட் வரையிலான வரம்புடன் இணைக்கப்பட்டு 25 விழுக்காட்டு வரி விகிதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் M40-க்கான e-Pemula திட்டத்தின் கீழ் மின்னியல் பணப்பை வழியாக 100 ரிங்கிட் வழங்கப்படும்.

இதன் வழி, 80 கோடி ரிங்கிட் மதிப்பிலான தொகை 80 லட்சம் பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)