பொது

நாளை வரவு செலவுத் திட்ட தாக்கல் உறுதி; ஆருடங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர்

06/10/2022 10:12 PM

கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) -- மக்களவைக் கூட்டத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது போல 2023-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நாளை நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தாக்கல் செய்வார்.

இஸ்தானா நெகாராவில் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஒப்புதலை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷாவிடமிருந்து பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோராததே இதற்கு காரணமாகும்.

2023-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் திட்டமிடப்படி நாளை மாலை நான்கு மணிக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பதாக, இன்று மதியம் அல்லது நாளை காலை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற ஆருடங்களுக்கு இந்த அறிவிப்பு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

எனினும், வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்த பின்னர் அல்லது அது அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 15-வது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தலைமையிலான அக்கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமா என்பதும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. 

இன்று மாலை 3.49 மணிக்கு இஸ்தானா நெகாரா வந்தடைந்த பிரதமர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மாமன்னருடன் சந்திப்பு நடத்தினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)