பொது

2023 வரவு செலவுத் திட்டம்: சிறு & நடுத்தர வியாபாரிகளுக்கு முக்கியத்துவம்

06/10/2022 10:32 PM

கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) --  போட்டித் தன்மை நிறைந்த வணிக உலகில் தங்களின் குறைந்த அளவிலான கையிருப்பைக் கொண்டு, வியாபார யுக்திகளோடு தினசரி வருமானத்திற்காக போராடுபவர்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள். 

கொவிட்-19 பெருந்தொற்றினால் சறுக்கல்களைச் சந்தித்த அவர்கள், கொவிட்டின் பிந்தய கால கட்டத்திலும் மீட்சி பெறமுடியாமல் இன்னமும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். 

எனவே, நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார ரீதியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கும் என்று எதிர்பார்க்கின்றார் கிளாந்தான் மலேசிய பல்கலைக்கழக தொழில்முனைவர் வர்த்தக புல பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் பரசுராமன்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அளப்பரியப் பங்கை அளிக்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், வணிக ரீதியாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய பங்காற்றுகின்றனர். 

கடந்த காலங்களைக் காட்டிலும் சிறுவணிகர்களின் நலன்கள் காக்கப்பட அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகள் பல எடுத்து வருது வரவேற்க கூடியது.  

எனினும், இன்றைய விலைவாசியின் அடிப்படையில், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அது போதுமானதாக இருக்காது என்பதால், அரசாங்கம் அதனை பரிசீலிக்க வேண்டும் என்று தேசிய மனிதவள ஆய்வுமைய ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் பரசுராமன் கேட்டுக்கொண்டார். 

''அடிப்படை ஊதியம் 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது. அந்த வகையில், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சிரமும் ஏற்படுகின்றது. அரசாங்கம் இதனை வரவு செலுவுத் திட்டத்தில் முக்கிய விவகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

கொவிட்-19 தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வரும் வியாபாரிகள், இதில் பெரும் சவாலை எதிர்கொள்வதால், அந்த தரப்புக்கும் உதவும் வகையில், ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார். 

இதனிடையே, வேலை வாய்ப்பின்றி தவிக்கும் பட்டதாரிகளின் நலனும் இந்த வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

''பட்டாதாரிகளுக்கு வேலை கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான தகுதிகளை அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்,'' என்றார் அவர்.

அதேவேளையில், இந்தியர்களுக்கான பல ஒதுக்கீடுகள் மட்டுமின்றி அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நாளை பல முக்கிய அறிவிப்புகள்  2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருக்கும் என்று தாம் நம்புவதாக பாலகிருஷ்ணன் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)