உலகம்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் பழுது பார்ப்பு வேலைகள்

04/10/2022 08:04 PM

சிந்து, 04 அக்டோபர் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த ஒரு மாத காலமாக தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களில் பலர் தற்போது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல துவங்கியிருக்கின்றனர்.

வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதால், அதனை பழுது பார்க்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையிலும், மேற்கூரைகள் உடையும் நிலையிலும் இருப்பதால், மறுசீரமைக்கும் பணி தாமதம் ஆகலாம் என்று சிந்து மாகாண மக்கள் அஞ்சுகின்றனர்.

குடியிருப்பு பகுதிகளில் எஞ்சியிருப்பதைக் பாதுகாத்துக் கொள்வதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குப் பரவியிருக்கும் வெள்ள நீர் வடிய இரண்டு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் விவசாயம் கேள்விக்குறியாகியிருப்பதாக மக்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால், சுமார் ஆறு லட்சத்து 37,000 மக்கள் தற்காலிக வெள்ள நிவாரன மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் கடந்த மாதம் அறிவித்தது.

வீடுகள், பயிர்கள், சாலைகள் மற்றும் கால்நடைகள் என சுமார் 3000 கோடி டாலர் சேதம் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)