விளையாட்டு

காற்பந்து உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது - பீஃபா

03/10/2022 08:17 PM

கோலாலம்பூர், 03 அக்டோபர் (பெர்னாமா) --  கிழக்கு ஜாவாவின், கன்சுரூஹன் அரங்கில் 125 பேர் பலி கொண்ட அசம்பாவிதம் குறித்து அனைத்துலக காற்பந்து சம்மேளனமான பிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் தமது இரங்கலையும் பதிவு செய்துள்ளார்.

இந்தோனேசியாவில் அரேமா எஃப்சி மற்றும் பெர்செபாயா சுரபாயா இடையிலான போட்டியின் முடிவில் நடந்துள்ள சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து காற்பந்து உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இது காற்பந்தாட்டத்திற்கு ஒரு இருண்ட நாள் மற்றும் மறக்க முடியாத ஒரு சோகமாகும். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார். 

இந்த கலவரம் காற்பந்து உலகில் மிகவும் மோசமான சம்பவங்களில் ஒன்றாகும்.

1964-ஆம் ஆண்டு, ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் போது, பெருவும் அர்ஜெண்டினாவும் சந்தித்த ஆட்டத்தில், பெரு லிமா தேசிய மைதானத்தில் இதுபோன்று நடந்த கலவரத்தில் 318 பேர் கொல்லப்பட்டதுடன் மற்றும் 500 பேர் காயமடைந்தனர்.

-- பெர்னாமா