பொது

குறைந்து கொண்டே போகும் மலேசியர்களின் ஆயுட்காலம்

28/09/2022 05:38 PM

கோலாலம்பூர், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் ஆயுட்காலம் சராசரி 73 ஆண்டுகள் நான்கு மாதங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட 74 ஆண்டுகள் 5 மாதங்களைக் காட்டிலும் ஆயுட்காலம் சற்று குறைந்துள்ளதை இது காட்டுகிறது.

புள்ளிவிவரத்துறை வெளியிட்ட 2022-ஆம் ஆண்டு மலேசிய ஆயுட்கால கணிப்பின்படி நாட்டில் ஆயுட்கால புள்ளிவிவரம் 2020-ஆம் ஆண்டு தொடங்கி குறைந்த வருகிறது.

இதற்கு காரணம், கொவிட்-19 நோயினால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதும் அடங்கும் என்றும் அக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக காலம் வாழ்வதாகவும் 2022-ஆம் ஆண்டு கணிப்புப்படி நான்கு ஆண்டுகள் 5 மாத வேறுபாடு காணப்படுவதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

2020-ஆம் ஆண்டில் பிறந்த ஆண் பிள்ளைகளின் ஆயுள் சராசரி 72 ஆண்டுகள் 5 மாதங்கள், 2021-ஆம் ஆண்டில் 72 ஆண்டுகள் மூன்று மாதங்கள் மற்றும் 2022-ஆம் ஆண்டில் 71 ஆண்டுகள் மூன்று மாதங்கள் என்று பதிவு செய்யப்பட்டது.

பெண்களின் ஆயுட்காலம், 2020-ஆம் ஆண்டில் 77 ஆண்டுகள் 2 மாதங்களாகவும் 2021-ஆம் ஆண்டில் 77 ஆண்டுகளாகவும் 2022-ஆம் ஆண்டில் 75 ஆண்டுகள் 8 மாதங்களாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதோடு, இவ்வாண்டு 15 வயது பூர்த்தியடையும் ஆண்கள் மேலும் 56 ஆண்டுகள் 9 மாதங்களும் பெண்கள் 61 ஆண்டுகள் மூன்று மாதங்களும் வாழ்வார்கள் என்றும் தரவுகள் காட்டுகின்றன.

இவ்வாண்டில், 60 வயது பூர்த்தியடையும் ஆண்கள் மேலும் 17 ஆண்டுகள் 5 மாதங்களும் பெண்கள் 20 ஆண்டுகள் ஒரு மாதமும் வாழ்வார்கள் என்றும் அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]