12 துறைகளில் ஏற்பட்ட பணவீக்க விகித உயர்வால் அன்றாட வாழ்க்கையில் சுணக்கம்

09/09/2022 08:13 PM

கோலாலம்பூர், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- 2021-ஆம் ஜூலை மாதம் 2.2 விழுக்காடாக இருந்த நாட்டின் பணவீக்கம் இவ்வாண்டு ஜுலையில் 4.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

உணவு; ஆடை, காலணி; மின்சாரம், நீர், எரிவாயு; கல்வி; சுகாதாரம்; தொடர்பு; போக்குவரத்து என 12 துறைகளில் பணவீக்கத்தின் விகிதம் உயர்வுக் கண்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சின் கீழ் செயல்படும் புள்ளிவிவரங்களுக்கான பிரிவு அண்மையில் தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதனால், நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் மக்கள் குறிப்பாக B40, M40 பிரிவினரின் தினசரி வாழ்க்கையிலும் சுணக்கம் ஏற்பட்டிருப்பதை மறுபதற்கில்லை.

இது குறித்து மேலும் சில விளக்கங்களை வழங்குகிறார் பொருளாதார ஆலோசகர் மனோகரன் மொட்டையன்.

இந்த பணவீக்க உயர்வு என்பது மலேசியாவை மட்டும் பாதிக்கவில்லை; மாறாக, பல உலக நாடுகளைப் பெருமளவில் பாதித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று, நாடுகளுக்கிடையே நிலவும் போர், இயற்கை பேரிடர்கள் போன்ற காரணங்களால் செம்பனை, எரிவாயு, தானியங்கள், காய்கறிகள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்படும் சிக்கல்களாலும் இந்த பணவீக்க விவகாரம் எழுவதாக மனோகரன் மொட்டையன் விவரித்தார். 

அதுமட்டுமின்றி, நாட்டின் நாணய மதிப்பு அதிகளவில் குறைந்து வருவதும் இதற்கு அடிப்படை காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.  

''நாடுகளுக்கிடையிலான பொருளாதாரத் தடை ஏற்பட்டிருக்கும் நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், நாட்டில் பொருட்களின் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டு தேவை அதிகமாகிறது. இதனால், பணவீக்கமும் உண்டாகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாலும் இச்சூழல் ஏற்பட்டுள்ளது,'' என்று அவர் தெளிவுபடுத்தினார். 

தற்போது, இவ்வாண்டின் நான்காம் காலாண்டிற்குள் நுழையவிருக்கும் வேளையில் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான நிதியுதவி திட்டங்களை வழங்கி வருகிறது. 

எனவே, அனாவசிய செலவுகளைக் குறைத்து அவற்றை மிகவும் விவேகமான முறையில் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மனோகரன் வலியுறுத்தினார். 

''பயனீடுகள் அதிகரித்து உற்பத்தி குறையும்போது விலைவாசியும் தானாகவே உயர்கிறது. எனவே, அவசர அவசரமாக எதையும் வாங்காமல் நிதானமாக திட்டமிட்டு வாங்க வேண்டும். அதிலும், அடுத்த மாதம் தீபாவளி. அத்தியாவசிய செலவுகளைக் குறைப்பதே விவேகமான வழி,'' என்றார் அவர். 

இந்நிலையில், இந்த பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் B40, M40 பிரிவினருக்காக 2023-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று மனோகரன் நம்பிக்கை தெரிவித்தார்.   

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]