COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

90 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி விரைவில் புதியக் கட்டிடம்

19/08/2022 08:49 PM

தம்பின், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், கெமென்சே, செம்பனைத் தோட்டத்தில் உள்ள சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, விரைவில் புதியக் கட்டிடத்தில் செயல்படவிருக்கிறது.

1934-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அப்பள்ளி, பழைய பள்ளியை விட சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில், 12 வகுப்பறைகள், மண்டபம், ஆசிரியர் அறை, சிற்றுண்டிச் சாலை ஆகியவற்றைக் கொண்ட மூன்று மாடி கட்டிடத்திற்கு இடமாற்றம் காணவிருக்கிறது. 

85 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட அந்தப் புதிய பள்ளியின்வழி, முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையில் பயிலும் 251 மாணவர்கள் பயனடையவிருப்பதாக கல்வி துணை அமைச்சர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கப்பட்ட அப்பள்ளியின் கட்டுமானப் பணி 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிறைவடைந்திருக்க வேண்டும்.

எனினும், சில காரணங்களால் அதன் கட்டுமானப் பணிகளில் நான்கு முறை தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். 

''சில காரணங்களால் இ.ஓ.டி பெறப்பட்டு, அது நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. அதாவது, 2016ஆம் ஆண்டில் தம்பின் நகராண்மைக் கழகம் தனிப்பட்ட சாலை, நுழையும், வெளியேறும் சாலையைக் கட்ட வேண்டும் என்ற விதிமுறையை விதித்தது. இரண்டாவது, முதன்மை சாலையிலிருந்து குழாயை இணைப்பதற்கான புதிய விதிமுறையாகும். 2019ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பி.கே.பி.-யும் ஒரு முக்கிய காரணமாகும்,'' என்றார் அவர்.

நெகிரி செம்பிலான், ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டத்திற்கு, நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் கடந்தாண்டில் பிப்ரவரி முதலாம் தேதியும், நிறைவு மற்றும் அமலாக்கச் சான்றிதழ் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியும் வழங்கப்பட்டது.

இதனிடையே, தங்கள் பள்ளி மாணவர்கள் நல்லதொரு சூழ்நிலையில் கல்வி கற்கவிருப்பது குறித்து ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை பி. நவநீதம் மகிழ்ச்சித் தெரிவித்தார்.

''பலகாலமாக நாங்கள் காத்திருந்த சி.பி.சி கல்வி அமைச்சு மூலம் இன்று கிடைக்கிறது. இந்த சான்றிதழ் மூலம், நாங்கள் புதிய பள்ளிக்கு சென்றவுடன் இப்பள்ளி மாணவர்கள் சிறந்த சூழ்நிலையில் கல்வி கற்கவிருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய புதிய பள்ளி ஓர் அழகான இடத்தில் அமைந்திருக்கிறது. அந்தச் சூற்றுச்சூழல், நிறைய வசதிகள் மாணவர்கள் தங்களுடைய கல்வியை சிறந்த முறையில் கற்க ஏதுவாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை,'' என்று நவநீதம் கூறினார்.

இதற்கு முன்னர் இருந்த பள்ளி, மாணவர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றும் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டதோடு, விலங்குகளால் மாணவர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டதாக நவநீதம் கூறினார்.

பழைய பள்ளி கோவிலில் செயல்பட்டு வந்த வேளையில், புதிய பள்ளியில் இருக்கும் 12 வகுப்பறைகளைக் காட்டிலும், 9 வகுப்பறைகள் மட்டுமே இருந்ததாக அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)