பொது

யு.பி.எஸ்.ஆர், பி.டி3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்படாது; கல்வி அமைச்சு உறுதி

09/08/2022 06:21 PM

புத்ராஜெயா, 9 ஆகஸ்ட் (பெர்னாமா) -- யு.பி.எஸ்.ஆர், பி.டி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், அச்சோதனைகள் மீண்டும் அமல்படுத்தப்படாது என்ற முடிவில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளது.

கல்வி மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் திறமைக் கொண்ட மாணவர்களை உருவாக்கவே யு.பி.எஸ்.ஆர், பி.டி3 தேர்வுகள் அகற்றப்பட்டதை இரண்டாவது கல்வி துணை அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் சுட்டிக் காட்டினார்.

மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாவதை நோக்கி செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு நிபுணத்துவம் கொண்ட மனிதவளத்தையே உருவாக்க நாடு விரும்புகிறது.

எனவே, ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க நாட்டிற்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக முஹமட் அலாமின் கூறினார்.

வகுப்பறை மதிப்பீடான, பி.பி.டி-ஐ அமல்படுத்துவதில் கல்வி அமைச்சு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று குற்றஞ்சாட்டி, யு.பி.எஸ்.ஆர், பி.டி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துமாறு பெற்றோர்கள் கோரி வருவது குறித்து விளக்குமாறு கேட்டுக் கொண்டபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

பி.பி.டி-இன் மூன்று முதன்மை விதிமுறைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாத நிலையில், இந்த புதிய அணுகுமுறையின் செயல்திறன் குறித்து பெற்றோர்களிடையே கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் எளிதில் கண்காணிக்கவும் மதிப்பிடவும் வகுப்பறையில் 20 லிருந்து 25 மாணவர்கள் மட்டுமே இருப்பது, வகுப்பறையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு வழிவிடும் வகையில் பாடத்திட்டம் அதிகம் இல்லாததை உறுதிசெய்வது, மாணவர்களை மதிப்பிடுவதில் ஆசிரியர்களுக்கு முழு அதிகாரமும் வழங்குவது ஆகியவையே அந்த மூன்று விதிமுறைகளாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)