நாட்டின் பொருளாதாரம் சிறந்த பாதையில் பயணிக்கிறது - நிதி அமைச்சர்

06/08/2022 08:43 PM

கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறந்த பாதையில் பயணிப்பதாக நிதி அமைச்சர்  தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காட்டிற்கும் அதிகமான இலக்கை எட்டுவதில் சாதகமானதாகச் சூழல் நிலவுவதாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் அவசியம் என்று தெங்கு சஃப்ருல் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர்களின் தேவைகளைச் சமநிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

''முன்பு நாடு தொற்றுநோயை எதிர்கொண்டபோது இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் இருந்தன. தற்போது அது குறித்த அச்சம் மக்களிடையே குறைந்து வருகிறது,'' என்று அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை, மலேசிய மாணவ தலைவர்களின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெங்கு சஃப்ருல் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)