அரசியல்

தெங்கு ரசாலி மீதான நடவடிக்கைக் குறித்து அம்னோ தலைமைத்துவம் இன்னும் விவாதிக்கவில்லை

07/05/2022 07:55 PM

பொந்தியான், 7 மே (பெர்னாமா) -- அண்மையில், கிளந்தானில் எதிர்கட்சியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது தொடர்பில், தெங்கு ரசாலி ஹம்சா அல்லது கூ லி மீது மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைக் குறித்து அம்னோ தலைமைத்துவம் இன்னும் விவாதிக்கவில்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் கூறினார்.

குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான தெங்கு ரசாலி, அம்னோ ஆலோசனை வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டாலும், அவர் இன்னும் அம்னோ உறுப்பினராக இருப்பதோடு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் கலந்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதோடு, நாடாளுமன்றத்தில் சுயேற்சை உறுப்பினராகவும் அமர்வதற்கு முடிவெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சில அம்னோ தலைவர் வலியுறுத்துவது போல, தெங்கு ரசாலி மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கட்சித் தலைமைத்துவம் விவாதித்துவிட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அஹ்மட் மஸ்லான் அவ்வாறு பதிலளித்தார்.

மற்றொரு நிலவரத்தில், MUAFAKAT NASIONAL குறித்து அம்னோ தலைமைத்துவம் இன்னும் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அஹ்மட் மஸ்லான் கூறினார்.

அக்கூட்டணி எந்தவொரு செயல்பாடுகளின்றி செயலிழந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனினும், இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டால், அம்னோவின் அனைத்து நிலைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அஹ்மட் மஸ்லான் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)