சிறப்புச் செய்தி

பல துறைகளில் ஆளுமைக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்த இந்திய விமானி சிவசங்கர்

06/12/2021 07:50 PM

கோலாலம்பூர், 06 டிசம்பர் (பெர்னாமா) -- தாங்கள் ஈடுப்பட்ட துறையைக் கடந்து தங்களுக்குள் இருக்கும் இதர திறமைகளைப் பட்டைத் தீட்டி வெளிகொணருவதற்கு இன்றைய இளைஞர்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர்.

மருத்துவரான ஒருவர் அழகு கலையில் ஈடுபடுவது, பொறியிலாளர் தொகுப்பாளராக செயலாற்றுவது என்று இளைஞர்கள் தங்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் மட்டுமே முதலீடாக செலுத்தி இதர துறைகளிலும் மிளிர்வதை இன்று காண முடிகிறது.

அந்த வரிசையில், பல துறைகளில் ஆளுமைக் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்த, இந்திய விமானியான சிவசங்கர் கிருஷ்ணன் இன்னும் அதிகமான இளைஞர்கள் தங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

லங்காவியிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கிச் செல்லும் விமானத்தில் பயணத் தகவல்களைத் தமிழில் அறிவிப்பு செய்த சிவசங்கரின் காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஜோகூர் பாருவைச் சேர்ந்தவரான சிவசங்கர் விமானியாக பணிப்புரிவது மட்டுமல்லாது சமையல், கலைத் துறை, மேடைப் படைப்பு, உடல் கட்டழகு ஆகிய துறைகளிலும் திறன் கொண்டவராக திகழ்கின்றார்.

குறிப்பிட்ட ஒரு துறையில் பணிப்புரிந்து வந்தாலும், தம்முடைய கனவுகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டதாக சிவசங்கர் தெரிவித்தார்.

''இருநூறு மேடைகளில் படைப்பாளராக இருந்துள்ளேன். சில நாடகங்களிலும், ஒரு படத்திலும் நடித்துள்ளேன். 2017ஆம் ஆண்டு உடல் கட்டழகு போட்டியிலும் கலந்து கொண்டிருக்கின்றேன். நமக்கு நிறைய ஆசைகள் இருக்கும். அதனை அடைய நான் இது போன்ற துறைகளில் ஈடுப்பட்டேன்,'' என்றார் அவர்.

இந்நிலையில், உணவு மற்றும் சமையல் மீது கொண்ட ஆர்வத்தினால், தமது தந்தையுடன் இணைந்து உணவகம் ஒன்றைத் தொடங்கியிருப்பதாக, சிவசங்கர் குறிப்பிட்டார்.

விமானப் பணியுடன் இணைந்து உணவகத்தையும் நிர்வகிப்பது சவால்மிக்க ஒன்றாக இருந்தாலும்,நேரத்தை சரியான முறையில் செலவிடுவதன் மூலம், அவ்விரண்டிலும் திறன்பட செயலாற்ற வழிவகுப்பதாக சிவசங்கர் கூறினார்.

''ஒரு விமானியாக இருக்கும் நான் எனது நேரத்தை சரியான முறையில் நேரத்தை செலவிடுகிறேன். உணவகம் நடத்துவதிலும் முழு கவனம் செலுத்தி வருகின்றேன்'' என்றார் அவர்.

இதனிடையே, சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டவரான சிவசங்கர் விமானத்தில் தாம் செய்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் படைப்பாளராக இருந்த அனுபவமே தம்மை இந்த அறிவிப்பை செய்ய இட்டுச் சென்றதுடன் விமானத்தில் பயணம் செய்யும் இந்தியர்களுக்கும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சிவசங்கர் தெரிவித்தார்.

''இது என்னுடைய சொந்த முயற்சிதான். 30இல் இருந்து 40 பயணிகள் விமானத்தில் பயணிக்கும்போது அவர்களுக்காக புதிய முயற்சியை மேற்கொள்வோம் என்று இந்த அறிவிப்பைச் செய்தேன். அதன் காணொளி பதிவை எனது இண்ஸ்டாகிராம் அகப்பக்கத்திலும் பதிவு செய்தேன். அது மக்களின் கவனத்தை ஈர்த்தது' என்றார் அவர்.

தாங்கள் ஈடுபட்ட துறையைத் தவிர்த்து இதர துறைகளிலும் வெற்றியடையும் போது, இளைஞர்கள் தங்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மிகப் பெரிய உந்துதலாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதோடு, தங்களின் தன்நம்பிக்கையும் மேலோங்கச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, தங்களின் திறமைகளைப் பூட்டி வைத்துக் கொள்ளாமல், அதனை வலுப்பெறச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சிவசங்கர் கேட்டுக் கொண்டார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)