பொது

முன்னாள் இளம் ஹாக்கி விளையாட்டாளர் தேவேந்திரன் விபத்தில் பலி

27/10/2021 07:54 PM

சுங்கை சிப்புட், 27 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய ஹாக்கி குழுவின் முன்னாள் இளம் விளையாட்டாளராகிய 25 வயதுடைய தேவேந்திரன் செல்வநாயகம் இன்று காலை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சுங்கை சிப்புட், தாமான் முஹிபாவைச் சேர்ந்த இவர், ஈப்போ, குணுங் ராப்பாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். 

இன்று புதன்கிழமை  காலை  8.15 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது செமோர் ஜெலாபாங் சாலையில் லாரியுடன் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே தேவேந்திரன் உயிரிழந்தார்.

பின்னர் அவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக  ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இளம் வயது முதல் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய நிலை விளையாட்டாளராக களமிறங்கி இருந்தார்.

தற்போது, கிளப்புகளை பிரதிநிதித்து தேவேந்திரன் விளையாடி வந்ததாக அவரின் சிற்றப்பா பிரபாகரன் வெங்கடாசலம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)