பொது

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு சுற்றுலா தளங்கள் முன்கூட்டியே திறக்கப்படும்

27/10/2021 04:43 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா)-- வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் லங்காவி தீவில் அனைத்துலக பயணக் குமிழித் திட்டம் திறக்கப்பட்டதும் நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்காவியில் இந்த முன்னோடித் திட்டம் திறக்கப்பட்டதும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு முழுவதும் சுற்றுலா மையங்களைத் திறப்பதற்கான செயல்பாட்டு தரவிதிமுறையான எஸ்.ஓ.பியுடன் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நென்சி சுக்ரி தெரிவித்தார்.

''நாங்கள் தேவையான எஸ்.ஓ.பி-களை ஏற்பாடு செய்துவிட்டோம். நாங்கள் மூன்று மாத காலத்திற்குப் பிறகு சுற்றுலா தளங்களை திறக்க எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் இப்போதைக்கு எஸ்.ஓ.பி முறையாகப் பின்பற்றப்படுவதால் அந்தக் கால அவகாசத்திற்கு முன்கூட்டியே அனுமதி வழங்கப்படுகின்றது. ஆக மிக விரைவில் அதாவது நவம்பர் மாதம் 16-ஆம் தேதிக்குப் பிறகோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ இந்த அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆயினும், அது எனது வாக்குறுதியன்று. இருப்பினும், நான் முயற்சி செய்கிறேன்,'' என்று அவர் கூறினார்.

மலேசியா முழுவதிலும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகள் நுழையும் காலம் குறித்து பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி இன்று மக்களவையில் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ நென்சி சுக்ரி இவ்வாறு பதிலளித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)