விளையாட்டு

வியன்னா பொது டென்னிஸ்: முதல் சுற்றில் முரே வெற்றி

26/10/2021 06:44 PM

வியன்னா, 26 அக்டோபர் (பெர்னாமா) -- ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் வியன்னா பொது டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், இங்கிலாந்தின் ஏண்டி முரே வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

அவருடன் சேர்ந்து, இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்றில், உலகின் முன்னாள் முதல் நிலை ஆட்டக்காரர் முரே, போலாந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ்சை சந்தித்து விளையாடினார்.

முதல் செட்டை, 6-4 என்ற புள்ளிகளில் முன்னிலை வகித்த முரே, இரண்டாம் செட்டில், 7-6 என்ற புள்ளிகளில் பின்னடைவைச் சந்தித்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் சுற்றில், 6-3 என்ற புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முரே தகுதிப் பெற்றார்.

அடுத்து நடைபெற்றவிருக்கும் இரண்டாம் சுற்றில், முரே ஸ்பெனின் கார்லோஸ் அல்கராஸ்சை சந்திப்பார்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், உலகின் ஏழாம் நிலை ஆட்டக்காரர் மேட்டியோ பெரெட்டினி, 7-6, 6-3 என்ற நேரடி செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை தோற்கடித்தார்.

நாளை நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றில், பெரெட்டினி, ஜியோர்ஜாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலியை சந்திப்பார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]