சிறப்புச் செய்தி

புத்தாக்க சிந்தனைமிக்க இந்திய ஆசிரியர்கள் கௌரவிப்பு

25/10/2021 07:37 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா)-- மாணவர்களின் வெற்றிக்கு ஏணிப்படியாக இருந்து அவர்களை ஏற்றி வைத்து அழகு பார்க்கும் ஆசிரியப் பெருந்தகைகளின் சேவைகள் அளப்பரியவை.

கல்வி மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் பெற்றோரைப் போன்று மாணவர்களின் கரம் பிடித்து வழி நடத்திச் செல்லும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்திருக்கிறது இந்தியா, டெல்லியைச் சேர்ந்த  AKS EDUCATION AWARDS நிறுவனம்.

மலேசியாவில் இந்த விருதைப் பெற்ற எண்மரில் எழுவர் இந்திய ஆசிரியர்கள்  என்பது பெருமைக்குரியது.

முகநூல் மற்றும் யூடியூப் வலையொளியில் இயங்கலை வாயிலாக நடைபெற்ற AKS GOLOBAL TEACHER AWARDS விருது விழாவில் உலகம் முழுவதிலிருந்து 110 நாடுகளைச் சேர்ந்த  26,700 ஆசிரியர்கள் பங்கு பெற்றிருந்தனர்.

அவற்றில் மிகச் சிறந்த 500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டனர்.

இவ்விருது விழாவை முன்னிட்டு மலேசியாவிலிருந்து மட்டும் 321 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்ததாக வெற்றி பெற்றவர்களில் ஒருவரான லாபிஸ் தமிழ்ப்பள்ளியின் குறைநீக்கல் போதனை ஆசிரியரான பிரியா ராஜேந்திரன் தெரிவித்தார்.

"இவ்விருது எனக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் கற்றல்- கற்பித்தலில் பல புத்தாக்கங்களைத் தயார் செய்து மாணவர்களின் துணையோடு தேசிய மற்றும் அனைத்துலகப் போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பியிருந்தோம். குறிப்பாக மலாய் மற்றும் கணித்ததை எவ்வாறு புத்தாக்க முறையில் சுலபமாகக் கற்றுக் கொடுக்க முடியும் என்ற முறைகளையும் செய்திருந்தோம். அதற்காக பல விருதுகள் பள்ளிக்கு கிடைக்கப்பெற்று சிறப்பிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

சாதாரண மாணவர்கள் மட்டுமின்றி தமது குறைநீக்கல் போதனையில் மாணவர்களையும் தயார் செய்து தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான புத்தாக்கப் போட்டிகளுக்கு அனுப்பி இருந்ததாக அப்பள்ளியின் புத்தாக்க மற்றும் வடிவமைப்பு பொறுப்பாசிரியருமான ஆசிரியை பிரியா குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் தொடர்பான E-TIC 2020 புத்தாக்கப் போட்டிகளிலும் லாபிஸ் தமிழ்ப்பள்ளி பங்கெடுத்து தங்கங்களை வாரிக் குவித்ததாக நாகப்பா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியுமான ஆசிரியை பிரியா கூறினார்.

"ஏறக்குறைய 52 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்களை உட்படுத்திய குழுவிற்கு தலைமையேற்று அதை சிறப்பாக வழிநடத்தினேன். அப்போட்டியில் ஏறக்குறைய 36 தங்கப்பதக்கங்கள் பள்ளிக்கு கிடைக்கப்பெற்றன. இதைத் தவிர இப்போட்டியின் வழி நமக்கு SCIENTIST MESRA ALAM, INSPIRING WOMEN AWARD, INTERNATIONAL TOP 10 ACHIEVER போன்ற விருதுகளும் கிடைக்கப்பெற்றன," என்று அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, வேதியியல் துறையில் பல்வேறு புத்தாக்க நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளதுடன் அது குறித்து புத்தகம் ஒன்றையும் தாம் எழுதியுள்ளதாக விருது பெற்ற மற்றொரு ஆசிரியரான கோமதி வீரசிங்கன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தமது பள்ளியில் பயிலும் பல மாணவர்களைப் பல்வேறு புத்தாக்கப் போட்டிகளில் பங்கு பெறச் செய்து, தேசிய அளவில் அவர்களை வெற்றி பெற வைத்திருப்பதாகவும் பேராக், ஈப்போ ஆவே மரியா கான்வென்ட் (AVE MARIA CONVENT) இடைநிலைப்பள்ளியின் வேதியியல் ஆசிரியரான அவர் குறிப்பிட்டார்.

"இவ்வேளையில் நான் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவி என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.சித்தியவான் மஹா கணேச வித்யாசாலையில் எனது தொடக்கக் கல்வியைக் கற்றேன். பின்னர் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியிலும் எனது ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்தேன். இதுதான் எனது அடித்தளம். அந்த அடித்தளமே எனது வெற்றிக்கு மூலக் காரணமாக அமைந்துள்ளது. என்னிடம் உள்ள திறமையை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே பட்டைத் தீட்டினர்," என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)