சிறப்புச் செய்தி

தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இந்தியர்கள் மும்முரம்

24/10/2021 07:52 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி கொண்டாடத்திற்கு இன்னும் பத்து நாட்களே எஞ்சியிருக்கின்றன.

நாட்டில் அமல்படுத்தப்பட்ட கொவிட்19 கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால், தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இந்திய மக்கள் முனைப்பு காட்டி வருவதாக கூறுகின்றார், பெர்னாமா தமிழ்செய்திப் பிரிவின் நிருபர் பவித்திரா விஜய சங்கர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் லிட்டல் இந்தியா என்று அழைப்படும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பெர்னாமா கண்ணோட்டம் ஒன்றை மேற்கொண்டது.

இன்று விடுமுறை என்பதால், அதிகமான மக்கள் தீபாவளிக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருவதை காணமுடிந்தது.

ஆடை, அணிகலன்கள், பலகாரங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என மக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

கடைகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்கினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால், தீபாவளி பண்டிகை மிதமான அளவிலேயே கொண்டாடியதாகவும் , இம்முறை வழங்கப்பட்டிருக்கும் தளர்வினால், பாதுகாப்பான முறையில் இவ்வருட தீபாவளியை சிறப்பாக கொண்டாட தயாராகி வருவதாகவும் மக்களில் சிலர் தெரிவித்தனர்.

''கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை வீட்டில் கொண்டாடினர். சுங்கை சிப்புட், பேராக்கில் இருக்கும் தாத்தா பாட்டிமார்களுடன் சென்ற வருடம் தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்த வருடம் அவர்களுடன் கொண்டாடும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இதனால் தான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்,'' என்று மோகனா தெரிவித்தார்.

''இம்முறை விலையின் ஏற்றம் சற்று அதிகமாத்தான் காணப்படுகின்றது. மக்களுக்கு ஏற்றாற்போல் விலை சற்று குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கக்கூடும்,'' என்று கனகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

தளவுர்கள் வழங்கப்பட்டாலும், வியாபாரத் தளங்களில் செயல்பாட்டுத் தரவிதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால், மக்கள் தயக்கமின்றி தீபாவளிக்கான பொருட்களை வாங்க வரலாம் என்று கடை உரிமையாளர்களில் சிலர் தெரிவித்தனர்.

''கடந்தாண்டு வியாபாரம் சற்று மோசமான நிலையில்தான் இருந்தது, ஆனால் இவ்வாண்டு தமிழர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் தீபாவளிக்கு ஒரு 9 நாட்கள் இருக்கின்றது. அதற்குள் வியாபாரம் சிறப்பாக அமைந்தால் அமோகமாக இருக்கும்,'' என்று அர்ஸினி குறிப்பிட்டுள்ளார்.

மைசெஜாத்ரா செயலியில் வருகையைப் பதிவு செய்வது, சுவாசக் கவசம் அணிவது போன்ற செயல்பாட்டு தர விதிமுறைகளை, மக்கள் பின்பற்றுவதையும் காண முடிந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]