அரசியல்

தேசிய முன்னணியுடன் பேச்சு நடத்த பெரிக்காத்தான் நேஷனல் மறுத்ததில்லை 

24/10/2021 06:07 PM

அலோர் காஜா, 24 அக்டோபர் (பெர்னாமா) -- தேசிய முன்னணியுடன் பேச்சு நடத்த பெரிக்காத்தான் நேஷனல் ஒருபோதும் மறுத்தது கிடையாது.

மேலும், மலாக்கா மாநில தேர்தலில் ஒத்துழைப்பை மேற்கொள்வதா இல்லையா எனும் நிலைப்பாட்டை தேசிய முன்னணி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

அடிமட்ட அளவில் தேர்தல் கேந்திரத்தின் தயார் பணிகள் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய இது அவசியம் என்று டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

வேட்புமனு தாக்கலை எதிர்கொள்ள பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அம்னோ இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனவே, அவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் மிக விரைவில் முடிவெடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்றார் அவர்.

மலாக்கா, அலோர்காஜாவிற்கு அருகிலுள்ள மஸ்ஜிட் தானாவில் பெரிக்காத்தான் நேஷனல் உடனான தேர்தல் கேந்திர சந்திப்பிற்குப் பின்னர், அக்கட்சியின் தொடர்புக்குழு தலைவரும், பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினருமான முகமட் அஸ்மின் இவ்வாறு கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனலுடன் அம்னோ ஒத்துழைப்பை மேற்கொள்ளவிருப்பதாக, அதன் சில தலைவர்கள் மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் மூலம் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் விவரித்தார்.

இருப்பினும், எந்தப் பொதுத்தேர்தலிலும் அம்னோ இனி பெர்சத்துவுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளப் போவதில்லை என்ற முடிவில் அக்கட்சி உறுதியாக இருப்பாத அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)