சிறப்புச் செய்தி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் வழி பள்ளிகளில் நோய்ப் பரவலைத் தவிர்க்கலாம்

18/10/2021 08:02 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- தேசிய மீட்புத் திட்டத்தின், நான்காம் கட்டத்திலுள்ள மாநிலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் வேளையில் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதிலுமுள்ள பெரும்பாலான கல்விக் கழகங்கள் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.

இதில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, பெரும்பாலானோர் குறிப்பாக தொடக்கப்பள்ளி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது.

ஆனால், மாணவர்கள் செயல்பாட்டு தர விதிமுறையை முறையாக பின்பற்றுவதோடு, பெற்றோர்கள் இது குறித்த மிக முக்கியமான விவரங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து, தாங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இச்சூழ்நிலையை மிக பாதுகாப்பாக கையாளலாம் என்கிறார் செந்தூல் சுகாதார சிகிச்சையகத்தில் பணிபுரியும் டாக்டர் அமிர்தன் தெய்வீகன்.

நாட்டில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் இடைநிலைப்பள்ளிகளிலும் உயர்கல்விக் கழகங்களிலும் நோய்ப் பரவும் ஆபத்து அதிகம் இருக்காது என்பது பெற்றோர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், அவர்கள் எந்த அளவிற்கு பாதுகாப்புடன் செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றி நேரடி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்பது இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

இச்சூழ்நிலையில், மாணவர்களுக்கு கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் குறித்தும் அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துவதன் வழி நோய்ப் பரவும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்கிறார் டாக்டர் அமிர்தன்.

''சுவாசக் கவசம் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை சரியாக அணிவது. சில நேரங்களில், எதற்காக சுவாசக் கவசம் அணிகிறோம் என்பது குறித்து ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு தெரியாது. எனவே, பெற்றோர்கள் இது குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும். சுவாசக் கவசம் அணிந்தால்தான், அவர்களுக்கு இருமலோ தும்மலோ ஏற்பட்டால், தங்கள் உடலில் இருக்கும் கிருமி பிறருக்கு பரவாது என்பதை மாணவர்களுக்கு விவரிக்க வேண்டும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களைத் தவிர்த்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் மிகப்பெரிய கடப்பாடு பெற்றோர்களுக்கு இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், மாணவர்கள் பொருட்களைப் பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்க பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள், தேவையான பள்ளி உபகரணப் பொருட்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

''பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்கு முன் அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதன்வழி, அவர்கள் நண்பர்களிடமிருந்து பொருட்களை இரவல் பெற வேண்டிய அவசியம் இருக்காது,'' என்றார் அவர்.

அதே வேளையில், பள்ளிக்கு செல்லும் முன்பு மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள் சில பாதுகாப்பு அம்சத்தை பின்பற்ற வேண்டும் என்றும் டாக்டர் அமிர்தன் குறிப்பிட்டார்.

''பள்ளிக்குள் எந்த அளவிற்கு எஸ்.ஓ.பி.-ஐ பின்பற்றுகிறோமோ அதற்கு இணையாக பள்ளிக்கு வருவதற்கு முன்னும், பள்ளி முடிந்து சென்ற பின்னரும், பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உதாரணமாக பள்ளியில் தொடுகை இடைவெளியைக் கடைப்பிடிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது பேருந்தில் அதைப் பின்பற்றமாட்டார்கள். எனவே, பெற்றோர்கள்தான் இது குறித்த விழிப்புணர்வை தங்கள் பிள்ளைகளிடையே ஏற்படுத்த வேண்டும்,'' என்று அவர் கூறினார். 

அதுமட்டுமின்றி, தங்களின் பிள்ளைகளுக்கோ, இதர குடும்ப உறுப்பினருக்கோ கொவிட்-19 நோய்த் தொற்று கண்டால் அல்லது அதற்கான அறிகுறிகள் இருந்தால் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட்-19 சுய பரிசோதனைக் கருவி கொண்டு சுயமாக தங்களைப் பரிசோதித்துக் கொள்வதோடு பள்ளி நிர்வாகத்திற்கும் அது குறித்து தெரிவிக்குமாறு டாக்டர் அமிர்தன் நினைவுறுத்தினார்.

இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு திரும்பும் இக்காலக்கட்டத்தில், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய கடப்பாடு இருப்பது மறுப்பதற்கில்லை.

இவ்விக்கட்டான காலக்கட்டத்தில் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் எத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து நாளைய செய்தியில் இடம்பெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)