உலகம்

வெளிநாட்டுச் செய்திகள் தொகுப்பு 20/09/21

20/09/2021 05:30 PM

லா பால்மா, 20 செம்டம்பர் (பெர்னாமா) -- ஸ்பெயின் கேனரி தீவில் உள்ள கும்ப்ரே வியாஜே எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. 

நேற்று அந்த தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் எரிமலை வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எரிமலையைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதுவரை உயிர்ச் சேதம் ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

தனது ஐ.நா. சபை கூட்டத்தை ரத்து செய்து உடனடியாக கேனரி தீவுக்குச் செல்லவிருப்பதாக  ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் அறிவித்திருக்கிறார்.

இந்த தீவில் சுமார் எட்டு எரிமலைகள் உள்ளன. 

ஆப்கானிஸ்தான்

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்று தலிபான் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் வீரர்களும் மக்களும் இதனால் கொல்லப்பட்டிருப்பதால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தலிபான் கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவிகள் பள்ளிக்கு வருவது குறித்து தலிபான் அரசு ஏதும் அறிவிக்கவில்லை.

இதனை உடனடியாக பரிசீலனை செய்து, பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை தலிபான் அமைப்பினர் அனுமதிக்க வேண்டும் என்று, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான்

மற்றொரு நிலவரத்தில், பெண்களுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், காபூலில் உள்ள ஜவுளிக் கடைகளில் மேற்கத்தியப் பெண் ஆடைகள் விற்கப்பட்டு வருகின்றன.

அதே வேளையில், தலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல், அந்நாட்டின் பாரம்பரிய பெண்கள் ஆடைகளும் அதிக அளவில் விற்கப்படுவதாகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான்

இதனிடையே, தலிபான் அமைப்பினர் ஆட்சியை நிறுவிய பின்னர், அந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதால், தலிபான் அமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காபூல் மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வியட்நாம்

கொவிட்19 நோய் பரவலுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஹனோய் முடிவெடுத்திருக்கிறது.

வியட்நாமில் பதிவு செய்யப்படும் கொவிட்19 சம்பவங்கள் குறைந்து வருவதாலும், பெரியவர்களுக்கான தடுப்பூசி செலுத்து விகிதம் அதிகரித்திருப்பதாலும், இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)