உலகம்

விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக பலர் கலந்து கொண்டதால் கொவிட்19 நோய் சம்பவங்கள் அதிகரிக்கலாம்

20/09/2021 05:21 PM

புதுடெல்லி, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியாவில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து விநாயகர் சிலைகளை ஆறுகள் மற்றும் கடலில் கரைப்பதற்காக வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் தொடுகை இடைவெளி பின்பற்றப்படாததால், கொவிட்19 நோய் சம்பவங்கள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்குப் பயன்படுத்தப்பட்ட சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று ஆறுகளிலோ கடலிலோ கரைப்பது இந்தியாவில் ஆண்டு தோறும் பின்பற்றப்படும் ஒரு சமய நிகழ்ச்சியாகும்.

கொவிட்19 நோய் பரவல் காரணத்தினால், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், அந்நாட்டின் வட மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் கொவிட்19 நோய் சம்பவங்கள் அதிகரித்தும் வேளையில், பொதுவில் மக்கள் கூடியிருப்பது நோய் சம்பவங்களை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

கொவிட்19 நோயினால், இந்தியாவில் இதுவரை மூன்று கோடியே 34 லட்சத்து 78,419 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், நான்கு லட்சத்து 44,838 பேர் பலியாகியிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)